ஈராக்கில் மீண்டும் கொரோனா வைத்தியசாலையில் தீ : 54 பேர் பலி

ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 54  பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் நசிரியா நகரில் இமாம் உசைன் என்ற வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு ஒட்சிசன் சிலிண்டர்  ஒன்று திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் சிக்கி  54 பேர் உயிரிழந்துள்ளதாக  சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 67 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது இவ்வாண்டில் கொரோனா வைத்தியசாலையில் இடம் பெற்ற இரண்டாவது  தீவிபத்தாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொரோனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தமையால் ஏற்பட்ட தீயில் 82 பேர் உயிரிழந்துள்ளதோடு, 110 பேர் காயமடைந்தனர்.

ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால் 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  17,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.