போராட்டங்களை ஒடுக்குவது எனது அணுகுமுறையில்லை -கோட்டா

போராட்டங்களை ஒடுக்குவது தமது அணுகுமுறை கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வீதியில் இறங்கி போராட்டங்களை செய்பவர்களை கைது செய்வதானது அவர்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இந்த தீர்மானம் மிக்க தருணத்தில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருமணம், மரண சடங்கு போன்ற மிகவும் இன்றியமையாத மனிதாபிமான தேவைகளின் போது கூட மக்கள் ஒன்று கூடுவது வரையறுக்கப்பட்டுள்ளது.

வெசாக், ஈஸ்டர் போன்ற நிகழ்வுகளின் போது மக்கள் ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை. இது அடக்குமுறை கிடையாது.

போராட்டங்கள் நடத்துவது மக்களின் உரிமை என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலேயே ஒர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்த ஒரே ஜனாதிபதி நானே.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மக்கள் போராட்டங்களை நடாத்திய போது தாக்கப்பட்டனர். தற்போது அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றப்பட்டதன் பின் நாடு முழுமையாக திறக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பில் தெளிவுடைய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து நாட்டை திறப்பதனை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.