விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை – அமைச்சர் கெஹலிய

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஊடக நிறுவனங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திற்கு கிடையாது.

எவ்வாறெனினும், நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கவும், இன ஐக்கியத்தில் விரிசலை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகளை போற்றும் வகையிலும் செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படும். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை போன்று சட்டத்தரணிகளை அழைத்து எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கு எதிராகவும் இரகசிய திட்டங்களை தீட்டவில்லை.

நாட்டின் அரசியல் அமைப்பிற்கு அமைவாக சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே எந்தவொரு நிறுவனத்திற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.