தடுப்பூசி இல்லையேல் வெளிக்கள ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் – கல்வி செயலாளருக்கு கடிதம்

doctor in medical mask injecting vaccine on womans shoulder epidemic hospital

கொவிட் – 19 தடுப்பூசிகள் எஞ்சுகின்ற பட்சத்தில் மாத்திரமே பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கும் நிலையில், இன்றிலிருந்து தடுப்பூசி வழங்கப்படும் வரை பாடசாலை வெளிக்கள ஊழியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் வெளிக்கள ஊழியர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கல்வியமைச்சினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் இன்றைய தின்திலிருந்து பாடசாலை வெளிக்கள ஊழியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கமாட்டார்கள் என்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் அவ்வமைப்பினால் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவிற்குக் கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கல்வியமைச்சின் செயலாளருடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், அதன்போது பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்ததாகவும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முணசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தடுப்பூசிகள் எஞ்சுகின்ற பட்சத்தில் மாத்திரமே வெளிக்கள ஊழியர்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டதாகவும் தம்மிக முணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கப்படும் வரை இன்றைய தினத்திலிருந்து பாடசாலை வெளிக்கள ஊழியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கமாட்டார்கள் என்று அறிவித்துள்ள ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், வெளிக்கள ஊழியர்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.