ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சை ஆகிய பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா , அல்லது பிற்போடுவதா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்கிழமை உறுதியாக அறிவிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி 86 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை விரைவாக திறக்க எதிர்பார்த்துள்ளோம். இணையவழி கல்வி வகுப்பறை கல்விக்கு நிகராக அமையாது. தொலை நோக்கு கல்வி முறைமை பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வை மாத்திரம் வழங்கும்.
பாடசாலைகளை திறக்கும் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூடு செலுத்தும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு மாவட்டத்தில் 97 சதவீதமும், கம்பஹா மாவட்டத்தில் 81 சதவீதமும், களுத்துறை மாவட்டத்தில் 82 சதவீதமும் முழுமைப் பெற்றுள்ளன.
அத்துடன் ஊடா மாகாணத்தில் 60 சதவீதம், பதுளை மாவட்டத்தில் 90 சதவீதமும், வடக்கு மாகாணத்தில் 47 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 சதவீதமும், யாழ் மாவட்டத்தில் 64 சதவீதமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 64 சதவீதமும், மத்திய மாகாணத்தில், 18 சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 17 சதவீதமும், தென் மாகாணத்தில் 15 சதவீதமும், வடமேல் மாகாணத்தில் 15 சதவீதமும், குருநாகலை மாவட்டத்தில் 22 சதவீதமும், அநுராதபுர மாவட்டத்தில் 09 சதவீதமும் முழுமைப் பெற்றுள்ளன. இதற்கமைய ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இதுவரையில் 86 சதவீதம் நிறைவுப் பெற்றுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் நிறைவு பெறும். நான்கு வார காலத்திற்கு பிறகு இரண்டாம்கட்ட தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் பாடசாலை வெளிகள ஊழியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்.
கல்வி பொதுதராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் நடத்துவது தொடர்பில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது.
இவ்விடயம் குறித்து மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பேச்சுவாரத்தையினை தொடர்ந்து பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்கிழமை அறிவிக்கப்படும்.
16 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாடத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் ஐந்தாம் தர புலமை பரீட்சை, உயர் தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.