திருமலை துறைமுகமும் விலைபோனது!

    திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்கஇலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துக் கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

     

    ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சீனாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போதே இது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. பசில் ராஜபக்ச கடந்த வாரம் நிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

    இந்தவொரு நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதில் பெரும் பங்காற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கவுள்ள தகவலை வெளியிட்டுள்ளது.