பிரித்தானியாவில் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்று! – வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,558 புதிய கோவிட் – 19 வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், 96 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 24ம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் பிரித்தானியாவில் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. மார்ச் 24ம் திகதி 98 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தது.

கடந்த வாரம் இதேநாளில் 36,660 கோவிட் – 9 வழக்குகள் மற்றும் 50 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை 14ம் திகதி 745 கோவிட் நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்,

கடந்த ஏழு நாட்களில் 4,500 பேர் அனுமதிக்கப்பட்டனர், இது 38.4 வீத உயர்வாகும்.

திங்கட்கிழமை சுமார் 35,670 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் அளவு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 46,349,709 பேர் முதல் அளவு தடுப்புமருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் 143,560 பேர் நேற்றைய தினம் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி, 36,243,287 பேர் இப்போது முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கோவிட் தொற்று காரணமாக கடந்த வாரம் இங்கிலாந்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.