சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு பாரியளவில் உதவுகின்றன – வெளிவிவகார அமைச்சர்

தேசிய நெருக்கடி நிலையொன்றில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கும் தெரியாது போனாலும், கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பது சர்வதேசத்திற்கு தெரிந்துள்ளதெனவும், சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு பாரிய அளவில் உதவி செய்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் எமக்கு நெருக்கடி நிலைமைகளில் உதவுகின்றமை  எம்மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20 ) அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் உரையாற்றிய வேளையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தேசிய பொருளாதார நகர்வுகளில் நாம் கவனம் செலுத்தாது விட்டால் தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் எமது பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தும்.

எனவே தேசிய வலுசக்தி வேலைத்திட்டமொன்றை தொடர்ந்தும் முன்னெடுக்க அமைச்சர் உதய கம்மன்பில முன்னெடுக்கும் நகர்வுகளை இடமளிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துள்ளார்.

ஐரோப்பா, சீனா ஆகிய  நாடுகள் இன்று இயற்கை வலுசக்தி திட்டங்களின் பக்கம் நகர்கின்றனர். நாமும் அதனை கருத்தில் கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.