கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை மூலம் அரச கூட்டுக்குள் வலுத்தது ஒற்றுமை

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசிலுள்ள கட்சிகளுக்கிடையே ஒற்றுமை மேலும் வலுப்பெற்றுள்ளது.

” இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேலும் பேசுகையில்,

“வாழ்க்கைச் செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையே அமைச்சர் அறிவித்துள்ளார். இதனை அடிப்படையாகக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது சரியான தகவல் கூறியவருக்கு சூடு நடத்துவதைப் போன்றதே.

அரசுக்குல் பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சிகளாலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர், எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு அரசுக்குள் பிளவுகள் உள்ளன என்ற நினைப்பில் எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அதன்மூலம் அரசுக்குள் இன்னும் நெருக்கமே ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

அரசுக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். பல்வேறு கோணங்களில் இந்தப் பிரச்சனைகள் தொடர்பாகப் பார்க்கின்றனர். இதன்படி பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனாலும், அரசின் ஒற்றுமையில் வீழ்ச்சியடையவில்லை” – என்றார்.