செல்லப்பிராணியால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. நினைத்துக்கூட பார்க்க முடியாத துயரம் இது..!

மனிதனின் சிறந்த நண்பனாக வர்ணிக்கப்படும் ஜீவராசிகளில் முதன்மையானது நாய்களே, ஆனால் அதெல்லாம் இயக்குனர் ராமநாராணயன் படங்களில் மட்டும் தான் உண்மை எனலாம். தனியாக இருக்கும் நாயிடம் குழந்தைகளை விட்டுச் செல்வது ஆபத்து என்பதை மிகவும் தாமதாகவே அதுவும் தாங்கள் பெற்றெடுத்த 5 வார ஆண் குழந்தையின் உயிரிழப்புக்கு பின்னரே உணர்ந்திருந்தனர் அக்குழந்தையின் பெற்றோர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கரியோங் எனும் நகரில் வசித்து வருகிறார்கள் அந்த இளம் தம்பதியர். இவர்களுக்கு 5 வாரங்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இவர்களின் வீட்டில் அமெரிக்கன் ஸ்டஃபோர்ட்ஷைர் டெரியர் (American Staffordshire Terrier) வகையைச் சேர்ந்த உயர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி அப்பகுதி காவல்துறையினருக்கு நாய் ஒன்று குழந்தையை கடித்து குதறி காயப்படுத்தியிருப்பதாக அவசர அழைப்பு ஒன்று வந்தது. இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், நாயின் பிடியில் இருந்த குழந்தையை மீட்டனர். அதே நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவினரும் அங்கு விரைந்து வந்ததால் ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தைக்கு சிபிஆர் எனப்படும் உயிர் காக்கும் அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த 5 மாத ஆண் குழந்தை நாய் கடித்த காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தது.

ஆசையாக பெற்றெடுத்த தங்களின் குழந்தையை தாங்கள் வளர்த்து வந்த நாயே கொன்றது அப்பெற்றொருக்கு கடும் அதிர்ச்சியை தந்தது. இதனால் மருத்துவ ரீதியில் முடக்க நிலைக்கு சென்ற குழந்தையின் தாயை ஆம்புலன்ஸின் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரியான டேரில் ஜாப்சன் கூறுகையில், அந்த சோகமான சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. துயரில் இருக்கும் குடும்பத்தினரின் சூழலுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் குறித்த தகவல்களை வெளியிடமாட்டோம். அக்குடும்பத்தினரின் மீதே எங்கள் எண்ணம் உள்ளது என்றார்.

குழந்தையை கொன்ற அந்த நாய் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் மற்றொரு நாயை கொன்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருப்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என அஞ்சுகின்றனர்.

குழந்தையை கொன்ற நாயை கருணைக் கொலை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.