கறுப்பு ஜூலை நாளன்று தோண்டப்பட்ட ‘தமிழ்க்கண்’

தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சை அராஜங்கள் அரங்கேற்றப்பட்டு நேற்று (ஜூலை 23) ஆம் திகதியுடன்  38 வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறான நாளொன்றிலேயே மற்றுமொரு ‘தமிழ்க்கண்’ பிடுக்கப்பட்டுள்ளது.

1983 ஜூலைக் கலவரத்தின் ​போது, வெலிக்கடை சிறைச்சாலையில், குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே, அவருடைய கண்கள் இரண்டும் பிடுங்கியெடுக்கப்பட்டு புத்தனின் காலடியில் போடப்பட்டன என்பது வரலாற்று ஏடுகளில் உள்ளன.

ஆனால், விண்ணப்பத்திலி​ருந்தே ‘தமிழ்’ பலவந்தமாக பிடுங்கப்பட்ட மற்றுமொரு வரலாற்று துரோகமான நாளாக, 2021 ஜூலை ​23 ஐ பதிவிடவேண்டும். கறுப்பு ஜூலைக்கு 37 வயதாகியிருந்த ​2020 ஆம் ஆண்டு, பிறப்புச் சான்றிதழில் ‘இனம்’ இல்லாமல் செய்யப்பட்டு ‘இலங்கையர்’ எனப் புகுத்துவதற்கான ​யோசனை பிரேரிக்கப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் தென்னிலங்கை சிங்கள கடும்போக்குவாதிகளின் இரத்தத்தை சூடாக்கி, வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்ளும் வகையில், அவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கறைபடிந்த வரலாற்று நாளான ஜூலை 23இல், தமிழ்க்கண்ணை பிடுங்கியெடுத்தது ஏன்?

சிங்கள-பௌத்த வாக்குகளால் வெற்றியீட்டிய அரசாங்கமென மார்த்தட்டி கொள்ளும் இவ்வரசாங்கத்தின் செல்வாக்கு, நாளுக்கு நாள் சரிந்துகொண்டே போகிறது. அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும், அதனூடாக செல்வாக்கை உயர்த்துகொள்ளும் வகையிலும், தமிழ்க்கண் மீது கையை வைத்திருந்திருக்கலாம்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில், ‘தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும்’ என அழுத்தம் திருத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் அவை பின்பற்றப்படுவ​தே இல்லை. இந்நிலையில், சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ் மொழியில் பூர்த்தி செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அப்படிவத்தை பூர்த்தி செய்யும்போது, பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல் வழிகாட்டி, மும்மொழிகளில் இருந்தாலும், விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்திச் செய்யவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மொழியைப் பாதுகாப்பதற்காக அவ்வப்​போது போராடவேண்டிய மிகவும் துர்ப்பாக்கிய நிலைமையொன்று அண்மைய சில மாதங்களில் கண்டோம். தமிழ் இல்லாதொழிக்கப்பட்டு சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை கண்ணுற்றோம். ஆக, மொழியுரிமையையும் பாதுகாக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

சமாதான நீதவான் விண்ணப்பப்படிவ விவகாரத்துக்கு எதிரணியினர் ஏகோபித்த அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பதுடன், ஆளும் தரப்புக்குள் இருக்கின்ற தமிழ்பேசும் சிறுபான்மையினர், கடுமையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கவேண்டும். இல்லையேல், இருப்பதையும் இழந்து நிர்வாணகோலத்தில் அலைவது வெகுதொலைவில் இருக்காது.

ஏற்கெனவே, எடுத்தியம்பியதைப் போல, ‘கெஞ்சி கோவணம் கட்டுவதை விட, நிர்வாணமே மேல்’ என்பதை காவடியெடுத்திருக்கும் சிறுபான்மை பங்காளிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் தலையை அசைத்து, எதற்கெடுத்தாலும் மண்டியிடவே வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்குள் எதிர்கால சந்ததியினரை தள்ளிவிட்டு விடவேண்டாமென இடிந்துரைக்கின்றோம்