இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு சீன மக்களுக்கு கோட்டா அழைப்பு

சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கக் கூடியதாக இருக்குமென்பதோடு, மீண்டும் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ செங் ஹொங்வினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், உத்தியோகபூர்வமாகத் தடுப்பூசிகள் கையளிக்கப்பட்டன.இதன்போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீன அரசாங்கம், 1.6 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. அந்தத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு, இலங்கை விமானச் சேவைக்குச் சொந்தமான UL – 869 மற்றும் UL – 865 ஆகிய இரண்டு விமானங்கள், இன்று (27.07.2021) அதிகாலை 5.30 மணிக்கு, கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ செங் ஹொங்வினால் (Qi Zhen Hong) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாகத் தடுப்பூசிகள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தத் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக, ஒரு தொகை சிலிஞ்சர்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இத்தடுப்பூசிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்காகவே, சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டன.

நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 72 சதவீதமானவை சைனோபாம் தடுப்பூசிகளாகும்.

கடந்த மார்ச் 31ஆம் திகதியன்று 06 இலட்சம் தடுப்பூசிகள், மே மாதம் 26ஆம் திகதியன்று 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வழங்கப்பட்ட 16 இலட்சம் தடுப்பூசிகளுடன் மொத்தமாக 27 இலட்சம் சைனோஃபாம் தடுப்பூசிகளை அன்பளிப்புச் செய்து, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குச் சீன அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பைப் பெரிதும் மதிப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் போது, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கி முடிக்க முடியுமெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கக் கூடியதாக இருக்குமெனக் குறிப்பிட்டார்.

எனவே, மீண்டும் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே, சீனத் தூதரகத்தின் அரசியல்துறை அதிகாரியான லூ சொங் (Luo Chong) ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.