ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் 7 விக்கெட்டுகளால் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 இந்தியன் பரீமியர் லீக் தொடரின் 40 ஆவது ஆட்டம் நேற்றிரவு டுபாயில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ஓட்டங்களையும், மஹிபால் லோமோர் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத், 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ஜேசன் ராய் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 60 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 41 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஒட்டங்களையும் பெற்றார்.

இன்று மாலை சார்ஜாவில் ஆரம்பமாகும் 41 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதவுள்ளன.

அதேநேரம் சார்ஜாவில் இன்றிரவு ஆரம்பமாகும் 42 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.