13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா? தமிழ் நெற் வெளியிட்ட விசேட அறிக்கை

இந்த கட்டுரை தமிழ் நெற்றில் இருந்து பெறப்பட்டவை

13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வேர்களை மட்டுமல்ல ஒரு குச்சியைத் தானும் பிடுங்கும் ஆற்றல் அதற்கு இருக்கப்போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் வேரூன்றிய சட்டவிதிக் கூறுகள் (entrenched clauses) என்று விபரிக்கப்படுகின்ற கூறுகளில் குறிப்பாக பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது ஒற்றையாட்சி முறையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குரிய ஒன்றாக இருக்கும் வரை எந்த மாகாண அரசின் நிரல் ஊடாகவோ மத்தியும் மாகாணமும் ஒத்துப்போகவேண்டிய நிரல் ஊடாகவோ அமுலாக்கப்படக்கூடிய எந்த அதிகாரப் பரவலாக்கல் மூலமாகவும் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்த நிறுத்துவது இலங்கையில் இருக்கும் நீதி மற்றும் மக்களாட்சி முறைகள் ஊடாகச் சாத்தியமற்றது. தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல அதன் வீரியத்தைக் குறைப்பதும் இயலாத கைங்கரியம்.

கருத்துக்கணிப்புக் கேள்விகளைப் தெளிவாகப் பார்வையிட படத்தில் அழுத்தவும்
பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையில் அல்ல, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுவதே வடக்கு-கிழக்கு மீதான இராணுவமயமாக்கல். இது ஒற்றையாட்சி அரசின் அரச தலைவரின் நேரடிக் கட்டுக்குள் வருவது. இலங்கை ஆக்கிரமிப்பு அரசின் நில ஒருமைப்பாடு என்ற அரசியற்சாசனம் சார்ந்தது. அரசியலமைப்பில் வேரூன்றியுள்ள முக்கியமான சட்டவிதிக்கூறாக முழுத்தீவுக்கான தனித்துவமான நில ஒருமைப்பாடு என்பது அமைந்திருக்கிறது. இங்கிருந்தே ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இணைபிரியா வடக்கு-கிழக்குத் தாயகம் மீதான இராணுவமயமாக்கல் இராணுவ ஆக்கிரமிப்பாக நீடிக்கிறது.

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது சிங்கள தேரவாத பௌத்தத்துக்கு முன்னுரிமை என்றே நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. ஒற்றையாட்சியில் தொடர்ந்தும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும். ஆக, வடக்கு கிழக்கில் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடாததும் தமிழ் இறைமை சார்ந்ததுமான ஆளுகை அற்றதுமான எந்த அதிகாரப்பரவலாக்கமும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசால் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் மீது முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த, தற்காலிகமாகவேனும் உதவப் போவதில்லை. நீதித் துறையும் அதற்கு ஒத்துழைக்கப்போவதில்லை.

தமிழ் இறைமை சார்ந்த ஆளுகைப் பலத்தைப் பதின்மூன்றாம் திருத்தம் முன்வைக்காதமையாற் தான், குறிப்பாக 2009 இற்குப் பின்னரான கடந்த 12 வருடங்களிலும், அது தோற்றுப்போனது. இதன் விளைவாகவே இன்று ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று முழங்கும் நிலைக்கு இலங்கை அரசு மிகத் துணிவாகச் சென்றிருக்கிறது. உண்மை நிலை அப்படியிருக்க பதின்மூன்று முழுதாக வேண்டும், அதில் இருந்து எமது அரசியற் கோரிக்கை ஆரம்பிக்கவேண்டும் என்ற முனகல் அபத்தமானதொன்று. மூக்கால் அழுவதைப் போன்றது.

2009 இன் பின்னான காலத்தில், சர்வதேசப் பங்களிப்போடு சிங்கள வரலாற்றியலும் மேற்குலகின் அபிவிருத்தி அரசியலும் ஒரு புள்ளியில் இணைந்து, இலங்கைத் தீவின் தொன்மையான வரலாற்றுக்காலம் தொட்டு ஐரோப்பியரின் காலனித்துவ காலம் ஈறாக இத் தீவில் ஒருமைத் தன்மை கொண்ட ஆட்சியின் தன்மையே சிங்கள மன்னராட்சியின் தலைமையில் இருந்து வந்தது என்ற ஒரு பொய்யான மாயத் தோற்றத்தையும் பரப்புரையையும் ஈழத்தமிழர்களுக்குக் கற்றுத்தர முழுமூச்சாய் முயன்றுவருகின்றன.

இதன் ஆழமான தார்ப்பரியத்தைத் தமிழர் தரப்பு இன்னமும் உணரவில்லை. உணர்ந்திருந்தால் மேற்கும் இந்தியாவும் ஒன்றிணைந்து உள்நுழைக்கும் இணக்க அரசியலுக்குள், தற்சார்புப் பொருண்மியம் பற்றிய பரந்த அறிவுடைய ஓய்வுபெற்ற பேராசிரியர் வி.பி சிவநாதனும், தமிழ் இறைமைப் பள்ளியின் தந்தையான வ. நவரத்தினத்தின் வழியில் முன்னொருகாலத்தில் நம்பிக்கை கொண்டு பயணித்த தற்போதைய மூத்த சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தர் நல்லதம்பி சீறீகாந்தாவும் யாழ்ப்பாணத்தில் திண்ணை விடுதியில் இணக்க அரசியலாருடன் இன்று குந்தியிருக்க மாட்டார்கள்.

திம்புத் தீர்மானத்தில் அங்கம் வகிக்காத, அல்லது இதுவரை நான் அறியத்தக்கதாக அதனைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாத கட்சிகளைச் சேர்ந்தவர்களான முன்னைநாள் அமைச்சர்கள் மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் இன்னும் இணக்க அரசியலுக்குப் பலியாகத் தயாராகும் மனநிலை கொண்ட, ஆனால் திம்புவில் பங்குபற்றிய முன்னாள் ஆயுதப்போராட்டத் தமிழ் அரசியலாருடன், மேற்கினதும் இந்தியாவினதும் ஒருங்கிணைந்த திட்டவட்டமான ஒரு நிகழ்ச்சிநிரலைப் புகுத்துவதற்காக யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்திருக்கிறார்கள் என்பதை இன்று காலை வெளியான திண்ணைப் ‘போட்டோ சூட்’ காட்சிகள் பறைசாற்றுகின்றன.

ஒற்றையாட்சியில் வேரூன்றியவையாக ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு விடயங்களையும் சிங்களவர்கள் அல்லாத ஏனைய மக்கள் ஏற்றுக்கொண்டு ஒழுகினால் மட்டுமே நல்லிணக்கம் என்று நல்லாட்சிக் காலத்தில் கூட ஐ.நா.வின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலூடாக அமைச்சர் மனோ கணேசனின் அப்போதைய அமைச்சான ‘தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு’ ஊடாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் எடுத்தியம்பியதை இத்தருணத்தில் நினைவு கூருவது தர்க்கீக ரீதியான புரிதலுக்கு அவசியமாகிறது.

இலங்கைத் தீவில் இறைமைக்குரிய தேசங்களை மறுதலிக்கும் ‘சிறீலங்கன்’ அடையாளத்தையும் ‘சிறீலங்கன்’ தேசக்கட்டலையும் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் ஒன்றான People of Sri Lanka எனும் (கவனிக்க: Peoples அல்ல People) நிகழ்ச்சிநிரலுக்குள் வரலாற்றியலை நன்கறிந்த பேராசிரியர் பத்மநாதன் போன்றவர்களும் ‘நல்லாட்சி’ காலத்தில் பலிக்கடா ஆக்கப்பட்டனர்.

மேற்குலகின் திட்டத்தோடு ஐ.நா.வின் UNDP-SELAJSI ஊடான நிதியுதவியோடு அந்த நூலாக்க வேலைத்திட்டம் நடைபெற்றிருந்தது. தன்னை, ஒரு தவறான சிந்தனைக்கு ஒத்துப்போகும் ஒருவராகக் காட்டும் வகையில் அந்த நூலில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தனக்கே தெரியாது உள்நுழைக்கப்பட்டதைப் பத்மநாதன் அவர்களே 18 ஜூன் 2018 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிப்படுத்தியிருந்தார். தவிரவும், 2019 ஜூலை மாதத்தில் அமைச்சர் மனோ கணேசனும் தமிழ்நெற்றுடனான நேர்காணல் ஒன்றில் அதை நேர்மையோடு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதென்பதையும் ஒளிப்பதிவு ஆதாரங்களோடு இன்றும் நாம் எடுத்துரைக்க முடியும்.

இலங்கைத் தீவில் ‘ஒரு மக்கள்’ இருப்பதான ஒரு ‘சிறீலங்கன்’ தேசக் கட்டலைச் செய்வதற்கு மேற்சொல்லப்பட்ட கற்பித வரலாற்றியலும் அபிவிருத்தி அரசியலும் நல்லிணக்க மாயையும் ஒன்று கூடிச் சந்தித்தன, சிந்தித்துச் செயலாற்றின.

இந்த நிகழ்ச்சி நிரலையே தமிழ் இறைமைசார் ஆளுகையை முற்றிலும் மறுதலிக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பும் நல்லிணக்கமாகவேனும் ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்பது தான் யதார்த்தம். இதிலே நல்லிணக்க அரசுக்கும் தற்போதைய ஒரு ஆட்சி ஒரு சட்டம் எனும் அரசுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரித கதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து இனவழிப்பு-நிலப்பறிப்பு, மரபியல் மற்றும் எல்லை மாற்ற நடவடிக்கைகள் அனைத்துக்குமான இலங்கை ஒற்றையாட்சியின் வேரூன்றிய சட்டவியற் கூறுகளே காரணம்.

ஒற்றையாட்சிக்குள் ஒருவித சமஷ்டித் தன்மையைக் கொண்டுவந்து இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாகத் தீர்வைக் கொண்டுவருவது இலங்கைத் தீவில் இயலாத கைங்கரியம் என்பதற்கு அரசியற் சாசனத்தின் மேலே குறிப்பிடப்பட்டவற்றைப் போன்ற சரத்துகளின் வேரூன்றிய தன்மையே காரணம். இவற்றில் இருந்து தமிழர் தாயகத்தைக் காப்பதற்கான அடிப்படை வலு பதின்மூன்றாம் சட்டத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் அதற்குக் கிஞ்சித்தேனும் கிடையாது என்பது சட்ட ரீதியாகவும் தர்க்கீக ரீதியாகவும் எடுத்தியம்பப்படவேண்டிய உண்மையாகும்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இலங்கை அரசின் ஒற்றையாட்சி இறைமையின் அடிப்படை அலகான நில ஒருமைப்பாடு என்பது ஒற்றையாட்சியின் வேரூன்றிய சட்டவிதிக்கூறாக உள்ளதும், அதனைப் பாதுகாக்கும் பொறிமுறைக்கே தேசியப் பாதுகாப்பு என்று ஒற்றையாட்சி அரச ஒழுங்கிற்கமைவாகவே சிங்கள இராணுவ மயமாக்கம் வடக்கு கிழக்கில் நடைபெறுகிறது என்பதையும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது இதன் ஒரு பக்கவிளைவே அன்றி, வடக்கு-கிழக்கிலான இராணுவமயமாக்கலுக்கான மூலம் அல்ல என்பதை நாமே மறுதலிக்கும் வகையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மட்டும் விலக்கிக்கொண்டால் போதும் என்ற கோரிக்கையை முன்வைக்குமாறு இணக்க அரசியல் எமக்குக் கற்பிக்க முற்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சிநிரலின் ஆணிவேரை ஆட்டங்காண வைக்கும் ஆற்றல் 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தினாலும் இம்மியளவுக்கும் அதற்கு இருக்கப்போவதில்லை என்பதற்கு அரசியற் சாசனத்தின் வேரூன்றிய தன்மை கொண்ட சட்டவியற் கூறுகளும் இராணுவ மேலாதிக்கமும் காரணமாக இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைப் புரிந்துகொண்டும் புரியாதவர்களாக, ஆன்மீக ஞானோதயத்துக்குப் பேறுபெற்றோர் போன்ற தோரணையில் விதண்டாவாத எடுத்துரைப்புகளை ஒரு சிலர் தமிழ்த் தேசியப்பரப்பில் மேற்கொள்கிறார்கள். இந்த எடுத்துரைப்புகள் காலங்கடந்தவையும் தர்க்கீகமற்றவையும் மட்டுமல்ல, புவிசார் அரசியலைச் சரிவரப் புரியாத நிலையில் நின்று மேற்கொள்ளப்படுபவை என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக்கான நியாயப்பாடு கொண்ட வழிவரைபடத்தையும், போராட்ட அரசியலின் புலம்பெயர் பரிமாணத்தையும், தாயகத்தில் புரையோடிப்போயிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளவேண்டிய அறம் சார்ந்த வழிகளையும் தகர்த்துவிடும் வெளிப்படுத்தல்களாகவும் இவை அமைந்துவிடுகின்றன. மூலச் சிக்கலைப் புரிந்துகொள்ளத் தேவையான விளக்கத்தையும் எதிர்கால வழிவரைபடம் குறித்த வருமுன் காப்போன் புரிதலையும் எடுத்தியம்பவேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது.

முதலில், இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்காகத் தமிழ் வாதாடு தளம் முன்னெடுத்துவரும் வழிவரைபடத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவேண்டியது இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மீதான ஒன்றித்த தமிழ்க் கருத்துநிலை பற்றியது. அடுத்த ஜெனீவாத் தீர்மானம் 2022 செப்ரம்பரில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.

இதுவே தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கோரிக்கைகளுக்கும் நிலைப்பாட்டுக்குமான அடுத்த திருப்புமுனைக்கான சந்தர்ப்பம். இந்தத் திருப்புமுனையைத் தனக்குச் சார்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சிநிரல் பத்துக்கு அல்லது அதற்கு ஒப்பான நிலைப்பாட்டை நோக்கித் திருப்புவதே இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்னால் இருக்கும் வேலைப்பாடு.

இத்தருணத்தில் பரந்துபட்ட தமிழர் தரப்புக்கு இருக்கும் தலையாய கடமை என்னவென்றால் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்குரிய கோடிகாட்டலை ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்குள் கொண்டுவருமாறு சர்வதேச தரப்புகளை வலியுறுத்தி அழுத்தம் தரும் நடவடிக்கைகளை பல மடங்கு பலமாக்கி வீரியத்துடன் முன்னெடுப்பதாகும். இதைச் சாத்தியமாக்கவேண்டுமென்றால் இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் இணைந்து முன்வைக்கும் பாதகமான இணக்க அரசியல் எனும் தடையோட்டத்தில் வெற்றிகரமான பாய்ச்சல்களைத் தமிழர் தரப்பு மேற்கொண்டாகவேண்டும்.

இதற்கு வேண்டிய கருத்தொற்றுமை தமிழர் தரப்பில் ஏற்படாது தடுக்கவேண்டும் என்றால், பதின்மூன்றை ஆரம்பப்புள்ளியாக வலியுறுத்தும் இணக்க அரசியலைத் தமிழர்களுக்குள் புகுத்தவேண்டிய தேவை மிலிந்த மொராகொட மற்றும் ஜீ. எல். பீரிஸ் தரப்புகளுக்கும் பசில் ராஜபக்ச போன்றவர்களுக்கும் நிச்சயம் இருக்கும் என்பதை நாம் உய்த்துணரவேண்டும்.

அதேவேளை, மொராகொடவின் நண்பரும் சீனாவின் பாதை ஒன்று பட்டை ஒன்று வேலைத்திட்டத்துக்குள் சூழற்பாதுகாப்பு எனும் போர்வையில் இயங்கும் ஈழத்தமிழர் விடயத்தில் அறம் தவறிய மனிதரும் ஐ. நாவிலேயே தனது மரியாதையை இழந்து நோர்வே திரும்பித் தத்தளித்து மீண்டும் வேறு வழிகளில் கரை சேர எத்தனிப்பவருமான எரிக் சொல்கைம் என்பவரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் மொராகொட நன்கு அறிவார். சொல்கைம் தற்போது தென்னிந்தியாவில் சுற்றுச்சூழலியல் நிறுவன வேலைகள் என்ற போர்வையில் திக்குவிஜயம் மேற்கொண்டிருப்பதும் அங்கிருந்தவாறு ஈழத் தமிழர்களுக்கு அறிவுரை வழங்குவதும் கவனிக்கப்படவேண்டியது.

சொல்கைமை அழைத்து மனித உரிமை நாளில் ஆலோசனை கேட்ட இலண்டன் தமிழ் சட்டவாளர்கள் கிளாஸ்கோ போராட்ட நேரத்தில் இன அழிப்புக் கோரிக்கையைத் தவறவிட்ட ஆவணம் ஒன்றைப் பெரும் பணவிரயத்தோடு தயாரித்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் பதினைந்தாம் கூற்றின் அடிப்படையிலான விண்ணப்பமாக அனுப்பிவைத்துள்ளார்கள்.

இந்தச் சட்டவியலாளர்களில் ஒருவரே எரிக் சொல்கெய்மை இலண்டனில் இருக்கும் தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre) மனித உரிமைத் தினத்தை ஒட்டி நடாத்திய கூட்டம் ஒன்றில் கடந்த வருடம் கௌரவப் பிரதிநிதியாக அழைத்திருந்தார் என்பதும், அதே தமிழர் தகவல் நடுவம் தற்போது மூன்று மாதங்கள் செலவிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை மீது அழுத்தம் கொடுக்குமாறு கோரும் அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது என்பதும் இந்த வேலைத்திட்ட ஆலோசனைகளுக்குள் ஜனாதிபதி சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரனும் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனும் அவ்வப்போது உள்வாங்கப்பட்டிருந்ததாகவும் இக்கட்டுரையாளருக்கு தமிழர் தகவல் நடுவத்தின் மூலங்கள் ஊடாக அறியமுடிகிறது. காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவரும் இம்முயற்சிக்கான உந்துசக்தியாகச் செயற்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

இணக்க அரசியலை காந்தீயம் என்ற போர்வையில் பிரித்தானியாவில் இயங்கும் ஈழத்தமிழர் அமைப்புகளுக்கூடாக ஒரு புறம் புகுத்துவதற்கும், மறுபுறம் சரிந்து செல்லும் கோட்டபாய ராஜபக்சவின் கீர்த்தியைத் தென்னிலங்கைச் சிங்களத் தரப்புகளிடம் தக்கவைக்கும் நோக்கில் அவரை கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டுக்குச் செல்லுமாறு தூண்டி அவருக்கு வேண்டிய தென்னிலங்கை அங்கீகாரத்தை நிமிர்த்திக் கொடுப்பதற்கும் எரிக் சொல்கைம் சூழலியல் மற்றும் பருவநிலைத் தளங்கள் ஊடாக முன்னெடுக்கும் மேற்கு, சீன, இந்தியா ஆகிய அனைத்துத் தரப்புகளுடனும் தொடர்புபட்ட இணக்க அரசியல் பயன்படுகிறது.

அதேவேளை, புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவைக்கும் கிளாஸ்கோ போராட்டம் பயன்படுகிறது. அதாவது, கிளாஸ்கோ மாநாடு அனைத்து தரப்புகளின் தேவைக்குமான களமாகியுள்ளது. இதை அவதானித்தாலே புவிசார் அரசியலும் இணக்க அரசியலும் சந்திக்கும் புள்ளிகள் தெரியவரும். இந்தப் புள்ளிகளை அருகிப் பயணிக்கும் ஈழத்தமிழர்களின் போராட்ட அரசியல் ஒரு புறம் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தில் 13 ஆம் திருத்தத்தைக் கோரிக்கையாக்கும் இணக்க அரசியற் களம் திசைதிருப்பலாக விரிகிறது.

இதைக் கண்ணுற்ற தமிழ்நெற், தமிழ் வாதாடு தளம் எனும் செயற்படு தளம் ஊடாக, நான்கு நாள் விவாதங்களைக் கடந்த ஒரு கிழமையாக முன்னெடுத்திருந்தது. உலகின் பல பாகங்களில் இருந்தும் கலந்துகொண்ட ஏறத்தாழ நூற்றைம்பது அரசியற் செயற்பாட்டாளர்களிடையே கருத்துக்கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் போது இந்தியாவிடம் தமிழர் தரப்பு முன்வைக்கவேண்டிய கோரிக்கைகள் எவை என்பதும் பிரேரிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தன. இந்தக் கூட்டங்களில் 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கூறுவது சரியா என்பதும் கருத்துக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

பங்கேற்றோரில் 75 வீதமானோர் அதை நிராகரித்து, புதிய ஒரு அணுகுமுறையை இந்திய ஒன்றிய அரசை நோக்கித் தமிழர் தரப்பு முன்வைக்கவேண்டும் என்றும், இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருக்கும் தமிழர் பிரதிநிதிகள் மட்டும் இந்திய மத்திய அரசை அணுகுவது பொருத்தமில்லை, இந்தியாவுடனான பேச்சுக்கான அணுகுமுறையை அவர்களுடன் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அரசு சார்பான ஒரு கூட்டுமாகச் சேர்ந்த நிலையில் மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்களில் வடக்கு-கிழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், முன்னை நாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு 13 ஆம் திருத்தத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக இனிமேலும் தமிழர் தரப்பு முன்வைக்கக் கூடாது என்று எடுத்தியம்பியிருந்தனர். அதுமட்டுமன்றி, இலண்டனில் இருந்து 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்தியப் பிரதமரைக் கோரிய அறிக்கையுடனான கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த தமிழர் தகவல் நடுவத்தின் இயக்குநர்களில் ஒருவரான வைத்தியர் சு. ரட்ணேஸ்வரன் அவர்களும் பங்குபற்றிக் குறித்த விவாதத்தை வரவேற்றிருந்தமையையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதே பொருத்தமானது என்ற தொனிப்பட இரண்டு முறை பங்குபற்றித் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான ம. க. சிவாஜிலிங்கம் அவர்கள் பதின்மூன்று என்ற பெயரை வலியுறுத்தாது ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர் தாயகம் என்ற கருத்து இருப்பதாகச் சுட்டிக்காட்டி மேலதிக உரிமைகளையும் பொதுவாக்கெடுப்பையும் கோருவதாக சில கடிதங்களை வரைந்திருந்தமையும் அவரின் இரு முறைப் பங்குபெறலுடன் ஆராயப்பட்டிருந்தது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை இந்திய-இலங்கை ஒப்பந்தம் சரிவர அங்கீகரிக்கவில்லை என்பதே கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. சிவாஜிலிங்கம் அவர்களும் தனது கோரிக்கை முன்வைப்பை இன்னும் செழுமையுள்ளதாக்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குள் 13 ஆம் திருத்தம் ஆரம்பப்புள்ளி என்பது தொடர்பில் இணக்கப்பாடற்ற நிலை காணப்படுகிறது.

இந்தக் கருத்துக்கணிப்பில் பங்குபெற்றோரின் பெரும்பான்மையோரின் அரசியல் நாடித்துடிப்பு யாழ்ப்பாணம் திண்ணை விடுதியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த திம்புக் கோட்பாட்டில் பங்கேற்ற கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளும் அதற்கு ஒப்பான கோட்பாட்டைக் கொண்டிருக்கக்கூடிய நீதியரசர் க. வி. விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சார்பாகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவநாதன் அவர்களும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு மாறானதாகவே இருந்திருக்கிறது என்பது இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியது.

ஈழத் தமிழ்த் தேசியப் பரப்பில் மக்களாற் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூவரில் ஐவரின் பங்கேற்பு இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது என்பது கவலை தருகின்ற ஒரு விடயம். அதுமட்டுமல்ல மனோ கணேசன் மற்றும் ஹக்கீம் ஆகியோரின் பங்கேற்பு அதற்கு ஒரு வித்தியாசமான அங்கீகாரத்தை ஊட்ட விழைவதும் கவலையளிக்கின்ற ஒரு நகர்வு. மிகுதி எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர். இவர்களில் எத்தனை பேர் பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாகக் கொள்ள வேண்டும் என்ற மேற்கு நாடுகளதும் இந்தியாவினதும் மட்டுமல்ல, மொராகொட, பீரிஸ் போன்றோரின் உள் விருப்பத்துக்கும் ஏதுவாக அமையப் போகிறது என்பதை எதிர்வரும் நாட்கள் தெரியப்படுத்தும்.

2001 ஐப் போல போராட்ட அரசியலில் தமிழ்த் தேசியத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் மீண்டும் சரியான ஒரு திருப்பத்தை மேற்கொள்ளக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தலைமையிலான ரெலோ நழுவ விடுவதாகவே அவர்களின் தரப்பில் மேற்கொள்ளப்படும் கருத்துருவாக்கம் இருக்கிறது.

பதின்மூன்றை முழுவதுமாக அமுல்படுத்த இரண்டுவருடக் காலக்கெடுவைக் கொடுக்கலாம் என்று ரெலோவில் சில வட்டாரங்கள் கருதுவதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல். அதில் ஏதும் உண்மை இருந்தால், அது மிகப்பெரும் தவறு மட்டுமல்ல, சர்வதேச நீதிப் பரப்பில் ஜெனீவாவிலும் வேறு முனைகளிலும் ஏற்படுத்தவேண்டிய மாற்றத்துக்கான காலக்கெடுவை நிராகரிக்கும் செயற்பாடாகவும் அது அமைந்துவிடும்.

பதின்மூன்றுக்கு ஏதாவது காலக்கெடு கொடுப்பதானால் அக் காலக்கெடு 31 டிசம்பர் 2021 இற்குப் பின்னர் நீடித்தால் அது தமிழ்த் தேசியத்தின் குழிபறிப்புக்கான ஒரு நகர்வாகவே அமையும்.

தங்கத்துரை, ஜெகன், குட்டிமணி ஆகிய ரெலோவின் முன்னோடிகள் இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றம் தம்மை விசாரணைக்குட்படுத்தும் தகைமை அற்றது என்று முழங்கிய முழக்கத்தையும் அவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பையும் ரெலோவின் அரசியல் நிலைநிறுத்துமா என்பது செல்வம் அடைக்கலநாதனின் அரசியலில் அடைக்கலமாகியுள்ளது என்பதே இன்றைய யாழ்ப்பாணத்தின் திண்ணைப் புகைப்படங்கள் எமக்குச் சொல்கின்ற செய்தி.

குறிப்பு ; தமிழ் மக்களுக்கான உண்மை அரசியல் நிலவரங்களையும் 13 ம் திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சிங்கள தேசத்துக்கு பலப்படுத்தும் என்பதை மிகவும் தெழிவாக வெளியிடும் தமிழ் நெற் இணையத்தளத்தை பார்வையிடவும்
www.tamilnet.com