இனப்படுகொலை புரிய வாளேந்துவோரும் பாடுவோரும் தாளம் போடுவோரும் ஒரே வகையான குற்றவாளிகளே

சிங்கள அரசினால் தமிழினத்தின் மீது புரியப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளையும் மறைக்கச் சிங்கள கலைஞர்கள் முற்படுகின்றனர். கலை, இலக்கியங்களைப் பயன்படுத்தி தமிழினத்தைச் சிதைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்திய-இலங்கை உறவில் இருக்கின்ற கரடுமுரடான கொதிநிலையைச் சமன்செய்யவும், தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய போராட்டங்களைத் திசை திருப்பவும், மடைமாற்றுவதற்கும் யோகானி என்கின்ற புதிய இளம் பைலா (குத்தாட்ட) பாடகி ஒருவரைச் சிங்கள பௌத்த பேரினவாதம் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மையில் இந்தப் பாடகியை அழைத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவித்தமையையும், அதேநேரத்தில் இந்திய இராணுவ தளபதியின் இலங்கைக்கான விஜயத்தின் போது அவருக்கு இப்பாடகியை அறிமுகப்படுத்தியமையின் பின்னணியில் இந்தியத் திரைப்படப் பாடல்களில் அவருக்குப் பாடுகின்ற வாய்ப்பை அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்பின்னணியில் இதைப்பற்றிய ஒரு நுணுக்கமான பார்வை நமக்கு தேவையாக உள்ளது.

ஒரு பாடகி பாடுவதற்கு அல்லது அவருடைய வாய்ப்பை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஆனால் அத்தகையவரை தமிழ் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் எதிர்க்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கான பதில்களே இங்கு முக்கியமானவை.

நீண்ட வரலாற்றுப் பாதையில், சிங்கள கலை ,இலக்கியம், கட்டிடக்கலை, இசை ,திரைப்படம் போன்றவற்றுக்கு எல்லாம் தமிழர் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவை பெருமைக்குரிய பங்களிப்புக்கள் ஆகும். இந்த வகையில் யோகானியின் பாடலை கண்டு தமிழர்கள் யாரும் பொறாமை படவில்லை.

ஆனால் இனப்படுகொலையாளர்களையும் , இனப்படுகொலை ஆதரவாளர்களையும் , இனப்படுகொலைக்கான சேவகர்களையும் கலைஞர் என்பதன் பெயராலோ வேறு எத்தகைய பெரும் பதவி, பட்டங்களின் பெயராலோ ஏற்கவோ ஆதரிக்கவோ முடியாது.

எனவே இந்த பாடகி யார்? இவருடைய பின்புலம் என்ன? இவர் எத்தகைய பாடல்களைப் பாடுகிறார்? இவர் மேடைகளில் எத்தகைய பேச்சுகளைப் பேசுகிறார்? என்ற பின்னணியை வைத்துக் கொண்டுதான் இவரைத் தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர் இலங்கை இராணுவத்தில் தமிழ் இனப்படுகொலையை மிகக் கோரமாகப் புரிந்த இராணுவ அதிகாரி பிரசன்ன டி சில்வா என்பவருடைய மகளாவார். பிரசன்ன டி சில்வா மாவிலாற்றின் மீதான படை நடவடிக்கையின் போது தலைமை தாங்கியவர். அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.

அத்தகையவர் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரை படைநடத்தியவர் என்ற வகையில் அவர் ஓர் இனப் படுகொலையாளி. அவர் இனப்படுகொலை, போர்க்குற்றம் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றம் என்ற மூன்று அடிப்படையிலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர். யோகானி இத்தகைய ஓர் இனப்படுகொலை இராணுவத் தளபதியின் மகள் என்பதற்காகவும் இவரை யாரும் எதிர்க்கவில்லை.

ஆனால் இவர் தன்னுடைய தந்தையை ஒரு வீரதீர புருஷனாகவும், நாட்டுக்குச் சேவையாற்றியவர் என அவரைப் புகழ்ந்து மேடைகளில் பேசுகிறார். இனப்படுகொலை புரிந்த சிங்கள இராணுவத்தைப் பாராட்டியும் தமிழரை எதிர்த்தும் இவர் பாடியுள்ளார்.

தனது பாடல்கள் ஊடாக பெற்ற பிரபல்யத்தை பயன்படுத்தி இவர் தன்னை ஒரு நல்ல மனிதராகக் காட்ட முனைகிறார். இதன் மூலம் தமிழினப் படுகொலையை மறைக்க முற்படுகிறார். அதுமட்டுமல்ல இனப் படுகொலையை நியாயப்படுத்தவும் முனைகிறார் என்ற அடிப்படையிலேதான் இவரைத் தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர்.

எனவேதான் இவர் தமிழ்த் திரையுலகில் பாடுவதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் . அது மட்டுமல்ல படைத்துறை உயர் அதிகாரியின் மகளாக இருந்து கொண்டு சிங்கள தேசத்தில் செல்வச் செழிப்புடன் எந்த தடைகளும் இன்றி, எந்த கஷ்டமும் இன்றி வாழ்ந்துவிட்டு இப்போது யுத்தத்தினால் தான் பெரும் கஷ்டங்களைச் சந்தித்ததாகவும் பெரும் துன்பங்களைச் சந்தித்ததாகவும் பொய் சொல்வதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அப்பட்டமான பொய்களைச் சொல்லி பெரும் ரசிகர் கூட்டத்தைத் திரட்டி , அந்த ரசிகர் கூட்டத்திற்கூடாக இலங்கை பௌத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மீது புரிந்த படுகொலையைப் புனிதப் படுத்த முற்படுகிறார்.

எனவே இத்தகையவர்கள் குறித்து தமிழினம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யோகானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைத்துக் கௌரவித்து அதன் மூலம் ஏதோ கலைஞர்களை இலங்கை ஜனாதிபதி கௌரவிக்கிறார் , மதிக்கிறார் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பாடகி, இசைக் கலைஞர், நடிகர், ஊடக செய்தி வாசிப்பாளர் எனப் பல பக்கம் கொண்ட இசைப்பிரியாவை நிர்வாணப்படுத்தி, கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த இலங்கை இராணுவத்தின் படைத்துறை செயலாளராக அன்றைக்கிருந்த இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் யோகானியை தலையாய பாடகியாக முடிசூட்டி முதன்மைப் படுத்துகிறார் என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

தமிழினத்தில் பிறந்ததற்காகப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு கலைஞரான இசைப்பிரியாவை நிர்வாணப்படுத்தி இராணுவத்துக்கு நடுவே அழைத்து வந்து சுட்டுக்கொன்று மனிதக்குலத்துக்கு எதிரான, மனித குலம் வெட்கித் தலைகுனியக் கூடிய கொடூரத்தைச் செய்தவர்கள் இன்று கலைஞர்களைக் கௌரவிப்பது என்பது என்ன விந்தை? இவர்கள்தான் அரசியலிலும், சுய வாழ்க்கையிலும் நல்ல நடிகர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்த நடிகர்களுக்கு உலகத் தலைவர்களையும், இந்தியத் தலைவர்களையும் இலகுவாக மாற்றக்கூடிய வல்லமை எப்போதும் உண்டு. சிங்கள கலை, இலக்கியத்திற்குத் தமிழினம் செய்த பாரிய பங்களிப்பை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். இன்று இருக்கின்ற சிங்கள இனத்தினுடைய கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தும் சிங்கள இனத்துக்குச் சொந்தமானவையல்ல. அவை பெரிதும் தமிழ் இனத்தினுடைய கலை, இலக்கிய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை என்பதைக் காணமுடியும்.

சிங்கள மொழித் திரைப்படங்களும் சரி, சிங்கள மொழிப் பாடல்களும் சரி அவை தமிழ்மொழி கலைஞர்களின் கலை இலக்கிய வடிவங்களில் இருந்தே தோற்றம் பெற்றவை. சிங்கள மொழியின் முதல் திரைப்படங்களையும் தமிழ் கலைஞர்களே உருவாக்கினார். பாடல்களையும் தமிழ் கலைஞர்களே பாடியுள்ளனர். 1947 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள கலை உலகில் ருக்மணி தேவி என்ற தமிழ் பெண்ணின் பங்களிப்பு பிரதானமானது.

1956ஆம் ஆண்டு வெளியான”” Rekava “” என்ற முதலாவது சிங்களத் திரைப்படத்தில் ருக்மணி தேவி கதாநாயகியாக நடித்து சிங்களத் திரைப்பட கலைக்கு கால்கோளிட்டார். இவ்வாறு சிங்கள திரைப்பட தயாரிப்பாளர்களாகவும், இயக்குநர்களாகவும் , பாடகர்களாகவும் ஆரம்பக் காலத்தில் அதிகம் தமிழர்களே இருந்துள்ளனர். இத்தகைய பெயர் பட்டியல் மிகப் பெரிது.

தமிழர்களே இத்துறையில் முன்னணி பாத்திரமும் வகித்துள்ளனர். இன்று யோகானி பாடுகின்ற பாடலும் தமிழ் கலைஞர்களின் பாடல்களைப் பின்பற்றியே தோற்றம் பெற்றவை. “டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே” என்ற பைலா பாடல்தான் சிங்கள பைலா பாடல்களுக்கெல்லாம் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இன்று இலங்கையில் இருக்கின்ற கட்டடக் கலை என்பது இலங்கைத் தீவிற்குச் சொந்தமானதல்ல.

இந்த கட்டடக்கலை தென்னிந்தியக் கட்டடக் கலை மரபுகளைப் பின்பற்றி தென்னிந்தியக் கட்டடக் கலைஞர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அனுராதபுர கால பௌத்த விகாரைகளின் கட்டடக்கலை ஆயினும் சரி, பிற்பட்ட காலத்திலும் சரி தென்னிந்தியக் கட்டடக் கலை பாணியிலேயே இருப்பதை அவதானிக்கலாம்.

இலங்கையின் நீர்வள நாகரீகம் குளக்கட்டும் தொழில்நுட்பங்கூட தென்னகத்தின் கட்டுமான தொழிநுற்பத்தை பயன்படுத்தியே இங்கு கட்டப்பட்டன. சிங்கள மொழி ஆயினும் சரி , சிங்கள இலக்கியங்கள் ஆயினும் சரி, மகாவம்சம் என்கின்ற அவர்களுடைய புனைகதை வரலாற்று நூல் ஆயினும் சரி அவை தமிழ் இலக்கியங்களையும், வர்ணனைகளையும், இலக்கிய பண்புகளையும் கொண்டிருப்பதையே காணமுடிகிறது. சிங்கள மொழி இலக்கணமும் சொற்களும் தமிழ் மொழியைப் பின்பற்றியதாகத் தமிழ் மொழிச் சொற்களின் வேர் சொற்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

இவை மட்டுமன்றி இன்று சிங்கள சமூகத்தில் இருக்கின்ற “”கரவ, துரவ, சலாகம, பெரவ “” சாதியினர் 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியக் கரைகளில் இருந்து வந்து இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரங்களில் குடியேறிய மக்கள் கூட்டத்தினர்.

இவர்கள் பின்னாளில் சிங்களவர்களாக மாறி அதன்பின் போத்துக்கேயர் காலத்தில் , இதில் ஒரு தொகுதியினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய மக்கள் கூட்டத்தினராயினர். இவர்களின் பெயர்களில் சில்வா, சொய்சா, பெரேரா, பெர்னாண்டோ, பீரிஸ், தேமிஸ் போன்ற போத்துக்கேய பெயர்கள் வருவதைக் காணலாம்.

ஃபிலிப் குணவர்தன, மருத்துவர் என்.எம். பெரேரா, மருத்துவர் கொல்வின் ஆர். டி சில்வா போன்ற முன்னணி இடதுசாரித் தலைவர்கள் எல்லாம் மேற்படி தமிழ் மூலத்தைக் கொண்ட சமூகத்திலிருந்தே வந்தனர். ஒரு காலத்தில் இந்த முன்னணி தலைவர்களின் மகத்தான சேவைகள் மிகவும் பாராட்டப்படக்கூடியவையாய் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யோகானியின் தந்தையார் பெயர் பிரசன்ன டி சில்வா என்பதாகும். இவர் மேற்கூறப்பட்டவாறு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய “”கரவ”” சமூகத்தைச் சேர்ந்த தமிழ் மூலத்தைக் கொண்டவராவார்.

தலைமை தளபதியாயிருந்து இனப்படுகொலை செய்த சரத் பொன்சேகா மேற்படி யோகானிக்கான பாராட்டு விழாவில், இவரது தந்தை பிரசன்ன டீ சில்வா வன்னியில் இனப்படுகொலை புரிந்த விசித்திரத்தைப் பெரிதும் பாராட்டி அத்தகைய வீரனின் மகள் யோகானி என்று புகழாரம் சூட்டினார். அவ்வாறு இவரின் தந்தை யுத்தத்தில் இனப்படுகொலை புரிந்ததைப் பாராட்டிய போது யோகானியின் பாடல்கள் அத்தகைய இனப்படுகொலை வாதத்திற்குக் கூடவே சேவை செய்ததையும் அவர் இணைத்துப் பாராட்டினார்.

இலங்கையில் இருக்கின்ற பௌத்த மதமும் இந்தியாவில் தோற்கடிக்கப்பட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டு இலங்கையில் நிலை எழுந்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவப் படைத் தளபதி பிரசன்ன டி சில்வா அவர்களின் மகள் யோகானியை ஒரு பாடகராக, ஒரு கலைஞராக முன்னிலைப்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது.

ஆனால், தான் போரினால் பாதிக்கப்பட்டவர் என்றும், தன் தந்தை தேசத்துக்காக பெரும் பங்காற்றினார் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டு பாடல் பாடி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரு இனப்படுகொலையைப் பெருமை பேசி பாடும் எவரையும் தமிழினம் அனுமதிக்காது.

இனப்படுகொலையை மேன்மைப்படுத்த, தூய்மைப்படுத்த முயற்சிப்பவர்கள் இனப்படுகொலையின் பங்காளிகளே என்ற வகையில் இனப்படுகொலைக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற, இனப்படுகொலையை மறைக்கின்ற, இனப்படுகொலையைப் புனிதப்படுத்துகின்ற எந்தக் கலைஞனையும் மனித உரிமைகளை மதிக்கின்ற எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் , ஏற்றுக்கொள்ளவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Thank you Lankasri