அரசாங்கத்திற்கு உள்ளேயும், அரசாங்கத்திற்கு எதிராகவும் எழுந்துள்ள பல்வேறு நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருவதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிப்பதுடன், ஜனநாயக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு அதிகார துஸ்பிரயோகத்தை செய்வதன் மூலமாக ஜனாதிபதி மாற்றுப்பாதையில் பயணிக்க நினைக்கின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாம் அமர்வை ஒத்திவைத்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்கட்சிகள் கண்டித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல இது குறித்து கேசரிக்கு தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தை இப்போது ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். பாராளுமன்ற செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு சென்ற வேளையில் எதிர்பாராத நேரத்தில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமை எம்மத்தியில் பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி மாற்றுப்பயணமொன்றை ஆரம்பித்து ஜனநாயகத்திற்கு எதிராக பயணிக்க தயாராகின்றார் என்றால் அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகள் முழுமையான சர்வாதிகார போக்கின் அடையாளமாகும். ஜனநாயகத்திற்கு தாம் செவிமடுக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டின் ஜனநாயகத்திற்கு சகல விதத்திலும் இன்று கேள்வி எழுந்துள்ளது.
நாடு பாரிய நெருக்கடி நிலைக்குள் உள்ள வேளையில், கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில் பாராளுமன்றத்தையும் ஒத்திவைப்பது நாட்டை மேலும் பலவீனப்படுத்தும் என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இது ஜனநாயகத்திற்கு முரணானது, இப்போது பாராளுமன்றத்தை கலைக்க எந்த அவசியமும் ஏற்படவில்லை.
அவரச நிலைமைகளோ அல்லது தேர்தலோ நாட்டில் காணப்படவில்லை. அவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை தான்தோன்றித்தனமாக பயன்படுத்தி அவர்களின் சர்வாதிகார போக்கினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே இதனை மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக கண்டிகின்றது என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இது குறித்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை இப்போது ஒத்திவைப்பதற்கான எந்தவொரு தேவைப்பாடும் ஏற்படவில்லை.
இலங்கை பாராளுமன்ற சம்ரதாயத்திற்கு அமைய வரவு செலவு திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற நிலைமைகள் இதற்கு முன்னர் காணப்படவில்லை.
தற்போது ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதானது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மற்றும் பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றின் தலைவர்களை மாற்றி நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிந்துகொள்ள முடிகின்றது.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடும் ஒரு விதத்தில் அதிகார துஸ்பிரயோகம் என்றே நாம் கருதுகின்றோம். தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பிரயோகித்து ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஜனாதிபதி ஈடுபடுகின்றார் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.