உலகின் மிகவும் பலம்பொருந்திய பதவி – பைடனுக்கு

லகின் மிகவும் பலம்பொருந்திய மனிதர் என்ற பதவி அந்தப் பதவிக்கு வந்திருக்கக்கூடியவர்களில் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமானவர் என்று கருதக்கூடிய ஒருவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த இடைப்பட்ட கால கட்டம் கூட இடர்மிக்கதாகவே இருக்கப்போகிறது.

பதவி விலகப்போகும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகார மாற்றத்தை சிக்கலானதாக்குவதற்கு திடசங்கற்பம் பூண்டிருக்கின்றார். பெரும்பாலான மாநிலங்களின் சட்டசபைகளின் கட்டுப்பாடு தொடர்ந்தும் குடியரசு கட்சியிடமே இருக்கப்போகிறது. செனட் சபையும் கூட அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கக்கூடும். பைடன் ஒரு பதவிக் காலத்திற்கு மாத்திரமே அதிகாரத்தில் இருக்கக்கூடியது சாத்தியம் என்பதால், அடுத்த தேர்தல் வட்டம் தொடங்குவதற்கு முன்னதாக வெறுமனே இரு வருடங்கள் மாத்திரமே அவரின் தேனிலவு காலகட்டமாக இருக்கப் போகிறது. தொற்று நோய், பொருளாதாரம் மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மையுடன் செயற்படும் சீனா என்று வெளிச் சவால்கள் பலவற்றையும் பைடன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

பெருவாரியான வழக்குகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளுடன்தான் டொனால்ட் ட்ரம்ப் அலுவலகத்தைக் கையளிக்கின்றார். தோல்வியை ஏற்றுக்கொண்டு அவர் ஒருமுறையேனும் உரைநிகழ்த்தப் போவதில்லை. பைடனுக்கு கொள்கை விவகாரங்களை சிக்கலானதாக்கக் கூடியதான பல நிறைவேற்று உத்தரவுகளையும் ட்ரம்ப் பிறப்பிக்கப் போகிறார். ட்ரம்புக்கு பெரிய நோக்கம் இருக்கிறது. புதிய நிருவாகத்தின் சட்டபூர்வத் தன்மை மற்றும் நியாயப்பாடு பற்றிய கேள்விகளைக் கிளப்பக்கூடிய சூழ்நிலை தோன்றக்கூடியதாக ட்ரம்ப் அபிப்பிராய வாக்கெடுப்புக்கள் சகலதையும் பொய்யாக்கிக்கொண்டு வெறித்தனமான தனது விசுவாசிகள் தளத்தை 48 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறார்.

குடியரசு கட்சியை அதன் பிடரியில் பிடித்து அவர் தொடர்ந்தும் ஆட்டிவைப்பார். இருதரப்பு கருத்தொருமிப்புடனான ஒத்துழைப்பிற்கு பைடன் விடுக்கக்கூடிய அழைப்பினால் பிரதான போக்கு அரசியல் தலைவர்கள் கவரப்படக்கூடும். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் புதிய நிர்வாகத்தை தொல்லைகொடுத்துத் தாக்குமாறு ட்ரம்ப் அவர்களை நிர்பந்திக்கக்கூடியது நிச்சயமாகும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த பல மாதங்களுக்கு முடிவடைந்துவிட்டது போன்று ஒருபோதும் தோன்றாமல் போகலாம்.

இந்த அரசியல் உள்நாட்டுப்போர் இந்தியாவிற்கு அனுகூலமானதாகவும் பிரதிகூலமானதாகவும் இருக்கும். பலவீனமான ஒரு நிர்வாகம் குடியேற்றவாசிகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவிடுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும். வர்த்தகக் கொள்கையும் கசப்புணர்வு குறைந்ததாகவே இருக்கலாம். ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழாது.

ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிப் பிரிவினருடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு பைடன் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அந்த இடதுசாரிகளில் பலர் மனித உரிமைகள் விவகாரத்தில் புதுடில்லியை கண்டிப்பதற்கு விரும்புகிறார்கள். பெருமளவிற்கு புதுடில்லி விரும்பக்கூடிய முறையில் பைடன் நிர்வாகம் பருவநிலை மாற்ற நெருக்கடியில் நடந்துகொள்ளும் என்று இந்தியா நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும்.

சாதகமான பக்கத்தை நோக்குவோமானால், பைடன் சீனா தொடர்பில் கடைப்பிடிக்க விரும்பக்கூடிய போக்கையும் விட கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சிலருக்கு டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்துவார். இவையெல்லாம் கொள்கை விவகாரங்களில் பெருமளவிற்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பெருமளவானவை சர்ச்சைக்குரியவை அல்ல. பைடனுக்கும் ட்ரம்புக்கும் இடையிலான எந்தவொரு கொள்கைத் தகராறுக்கு அப்பாற்பட்டதாகவே அமெரிக்காவின் இந்தியக் கொள்கை அமையலாம்.

இந்துஸ்தான் டைம்ஸ், ஆசிரிய தலையங்கம்