பலம் வாய்ந்த ஜப்னா கிங்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது காலி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பி.ப. ஆரம்பமான போட்டியில் பலம் வாய்ந்த ஜப்னா கிங்ஸ் அணியை 20 ஓட்டங்களினால் காலி கிளடியேட்டர்ஸ் வீழ்த்தியுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 19 ஆவது ஆட்டம் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளடியேட்டர்ஸ் மற்றும் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை குவித்தது.

Image

அணி சார்பில் அதிகபடியாக குணதிலக்க 19 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஜப்னா அணி சார்பில் வியாஸ்காந்த், ஜயவிக்ரம மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சோயிப் மாலிக் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

130 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணியால் காலி கிளடியேட்டர்ஸின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

இதனால் அவர்கள் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

அணி சார்பில் அதிகபடியாக மலிக் 23 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நூர் அஹமட், சமித் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் அமீர், மொஹமட் ஹபீஸ் மற்றும் சஹான் ஆராச்சிகே தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பானுக ராஜபக்ஷ தெரிவானார்.

Image