இலங்கையில் தொடரும் வன்கொடுமைகள்!பயிரை மேயும் வேலிகள்: சிறுமிகள் மீது நடக்கும் கொடூரங்கள்

நாம் வாழும் இந்த உலகம் நாகரீகம் என்ற பெயரில் பாரிய வளர்ச்சியை நாளுக்கு நாள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வளர்ச்சிப் போக்கு எந்த அளவிற்கு நன்மையை பயக்கின்றதோ, அதைவிட அதிகமாக தீமையை விளைவித்துக் கொண்டிருக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே.

இதற்கு முன்னரான காலத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் கூட தற்போதைய இணைய வளர்ச்சியாலும், இயந்திரயமாக்களினாலும் சர்வ சாதாரணமாக அண்மைக்காலத்தில்  அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மணித்தியாலத்திற்கு குற்றச் செயல்களினால் பதிவாகும் மரணங்களை கணக்கிட்டால் அவை எண்ணிலடங்காதவை, இயற்கை பேரனர்த்தம், நோய்கள், விபத்துக்கள் என்பவற்றை தாண்டி மனித குலம் இவ்வாறான ஒரு வழியிலும் அழிந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆதி காலத்தில் பெண்களை பொறுத்தமட்டில் சிறு பராயத்திலேயே திருமணம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டனர், மிக சிறு வயதில் திருணம், வயதாலும், மனதாலும் முதிர்ச்சி பெறாத நிலையில் தனக்கென்று ஒரு குழந்தை என எழுதப்படாத நியதிகளின் கீழ் பெண்களில் வாழ்வியல் அமைந்திருந்தது.

அந்த கலாச்சாரம் படிப்படியாக பல்வேறு வாத விவாதங்களுக்கு மத்தியில் குறைவடைந்து வந்தது மாத்திரம் அல்லாமல், திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்பதைத் தாண்டி அடுத்த அடியை பெண்கள் எடுத்து வைத்ததும், ஆட்சி முதல் ஆராய்ச்சி வரை கொடி கட்டி பறக்க ஆரம்பித்தனர்.

ஆனால், அந்த வளர்ச்சி போக்கு ஒரு புறம் இருக்க, அவர்கள் மீதான வன்முறை அசுர வளர்ச்சி கண்டது என்பது மறுக்க முடியாத உண்மையே.

இன்று எமது உலக நாடுகள், குறிப்பாக இலங்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அவலம் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகம். அதுவும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

ஒவ்வொரு மணித்தியாலமும் எங்கோ ஓர் மூலையில் ஒரு சிறுமி அல்லது சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

நாம் மிகவும் அறிந்த இலங்கையை உலுக்கிய புங்குடுதீவு வித்தியா முதல் ஐந்து வயதான சேயா சதெவ்மி, அண்மையில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன்தாரணி, தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சிறுமி நிதர்சனா, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்  உயிரிழந்த ஹிசாலினி வரை எமக்கு உணர்த்திச் செல்லும் ஒரே பாடம் இந்த உலகு பெண் குழந்தைகளை, பெண் குழந்தைகளாகவே சந்தோசமாக வாழ வைக்க தகுதியற்றது என்பதேயாகும்.

இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்தால், குறித்த சிறுமியரின், குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை சுற்றியுள்ளவர்களாலேயே அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பர்.

சிறுவர் வன்புணர்வு அநேகமாக வீடுகளிலும் அதனைச் சுற்றியுள்ள சூழலிலும் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தம் உறவுகளாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்குப் பலியாகி கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம்.

தமது மாமன், மைத்துனன், அண்ணன், தந்தை என்று அவர்கள் அறியாமலும், அறிந்தும் சிறுவர்கள் இந்தப் துஷ்பிரயோகங்களுக்குப் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

அதை தவிர்த்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளிலும், தாம் வாழும் சூழலிலும் தினம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மிரட்டல்கள், பயமுறுத்தல், சின்ன அன்பளிப்புக்கள் மூலம் அவர்களை தம்வசப்படுத்திப் பின்னர் இவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சில சிறுவர்கள் தமது தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் உறவுகளாலேயே பணத்திற்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது சமகாலத்தில் அதிகரித்து வருவது சுட்டிக்காட்டத் தக்கது.

தம்மை அறியாமலே தமது எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பலத்த கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.

ஒரு குழந்தை இவ்வாறான வண்புனர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறினாலேயன்றி பொது மக்கள் இது குறித்து அறிந்து கொள்வது மிகக் குறைவு. ஊடகங்களில் வெளிவராமல், பொது மக்கள் பார்வைக்கு புலப்படாமல் இன்னும் பல கொடுமைகளும் வண்புனர்வுகளும், துன்புறுத்தல்களும் அன்றாட வாழ்வில் பெண் குழந்தைகள் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் பெண் குழந்தைகள் தனித்து வீட்டில் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் இவ்வாறான ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. வெளிச்சத்திற்கு வராதவை ஏராளம்.

பாடசாலை விடுமுறை நாட்கள், மேலதிக வகுப்புக்கள், உறவினர் வீடு, ஏன் தனது சொந்த வீடுகூட தற்போது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்றது என்பதே நிதர்சனமான உண்மை.

இத்தவறுகள் ஏன் தடுக்கப்படுவதில்லை ஒவ்வொரு பெற்றோரும் தம்மைச் சுற்றியுள்ள உறவுகளை நம்புவதும், அவர்களின் பராமரிப்புகளில் தம் பிள்ளைகளை நம்பி விட்டுச் செல்வதுமே முக்கிய காரணியாகின்றது.

சிறுவர்களது பதின்ம வயதுகளிலேயே அவர்களது உடலில் பருவ மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அவர்களின் மனநிலையும் மாற்றம் காண்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான கண்காணிப்பு பெற்றோரின் கையிலேயே தங்கி உள்ளது.

பருவ வயதாகும் போது உங்கள் பிள்ளைகளுக்கான முதல் பாதுகாப்பு நீங்களாக மட்டுமே இருக்க முடியும். சிறுவர்களை சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடுவதும், அவர்களுக்குப் பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுப்பதும் பெற்றோரின் முதல்நிலை கடமையாக காணப்படுகின்றது.

இவ்வாறான வன்முறைகளை முற்று முழுதாக நிறுத்த முடியாவிட்டாலும், தவறுகள் நிகழாத வண்ணம் தடுக்க வேண்டியது சுற்றியுள்ள சமூகத்தினரின் தலையாய கடமை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட நிதர்சனா என்ற சிறுமி விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கைகள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப் போக்கால் சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சிறுமியுடைய அக்காவின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது உலகத்தை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கக் கூடிய கோவிட் தொற்று காரணமாக பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் குறித்த சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு மரணம் நிகழ யார் காரணம்? பெண் குழந்தைகள் யாரை நம்புவது? பெற்றோருக்கும், உடன் இருப்போருக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமையின் விளைவுகளால் இன்னும் எத்தனை உயிர்களை காவு கொடுக்கப் போகின்றோம்?

ஐந்து வயது சிறுமியையும் பெண்ணாக மட்டுமே பார்க்கும், ஒன்றரை வயது குழந்தையையும் வெறும் சதையாக மட்டுமே பார்க்கும், ஒரு தனிப்பட்ட நபரை பழிவாங்க பெண் குழந்தையை வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்யும், ஆசிரியர் என்ற நிலையை மறந்து மாணவியரையும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சமூகம் இருக்கும் வரை ஒரு வித்தியா அல்ல இன்னும் பல வித்தியாக்களை நாங்கள் எமது வாழ்நாளில் காணத்தான் போகின்றோம்.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தனி மனித மாற்றம் இல்லையெனில் இன்னும் பல கொடூரங்களை நாங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.