13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பிரச்சினையை எப்படிக் கையாள்வது?

13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒரு மாதமாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா என்ற கேள்வி ஒரு புறமும், அதை ஏற்பவர்கள் “துரோகிகள்” என்று கூறுபவர்கள் இன்னொரு புறமுமாகக் குடும்பி பிடிச் சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பகுதியினர் அது போதாது என்கிறனர். இதன் உண்மைத்தன்மை பற்றிச் சற்று பார்ப்போம். 1987ல் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அன்றைய காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு தற்காலிக தனிஅலகா, மாகாண ஆட்சி அதிகாரத்தில் கீழான தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு முறைமையாகும். இந்த தீர்வுத்திட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்த வரைபு ஒன்று செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் இலங்கையின் ஒற்றையாட்சி முறையில் அமைந்த 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனையே 13ஆம் திருத்தச் சட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்ட மசோதாவை 1987 டிசம்பரில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை உங்கள் பக்கம் நின்று நிறைவேற்றுவேன் என அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களுக்கு வாய்மொழி மூலமாக உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்காலிக மாகாண ஆட்சி அதிகார சபையை பொறுப்பேற்று நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முன் வந்தார்கள் என்பதும் உண்மையே.

ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மேற்கொண்ட இராஜதந்திர நாசகாரச் செயல்களால் மூன்று மாதத்திலேயே விடுதலைப் புலிகளையும் இந்தியாவையும் மோத வைத்துவிட்டது . இதன்பின் மோதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை தவிர்த்து ஏனைய ஆயுதக் குழுக்களை இணைத்து ஒரு மாகாணசபை அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சி இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திருத்தச் சட்டம் இந்தியாவின் அழுத்தத்தினாற்தான் கொண்டுவரப்பட்டது என்பதும் உண்மையே. ஆனால் 1987 ஒட்டோபர் 10ம் திகதி புலிகள் இந்தியபடை போர் ஆரம்பித்திவிட்டது. யாழ்குடாவலும் வன்னியிலும் கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்க கொழும்பில் இருந்துகொண்டு இந்தியா சொல்கிறது என்பதனாற்தான் நாம் ஆதரிக்கிறோம் என கூட்டணியினர் அன்றைய காலத்தில் குறிப்பிட்டனர் என்பதும் உண்மையே.

அதேபோன்றே ஆயுதப் போராட்ட இயக்கங்களும் கூறின என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். வட கிழக்கு மாகாணசபை என்ற நிர்வாக அலகு ஜனாதிபதியின் அறிவிப்பின்மூலம் 1988 அக்டோபர் 2 ஆம் திகதி அன்று வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் இந்த இணைப்பை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அறிவித்து அங்கு வாக்கொடுப்பிற்கு விட்டு சட்டமாக நிறைவேற்றியதன் பின்தான் அறிவித்திருக்கவேண்டும்.

அவ்வாறு பிரகடனப்படுத்தினால் மட்டுமே அரசியல் சாசனப்படி அந்த இணைப்பு செல்லுபடியானதாகும் என்பது இங்கே முக்கியமானது. மேற்படி சட்ட வலுவற்று இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணத்தில் 1988 நவம்பர் 19 இல் தேர்தல் நடத்தப்பட்டது.

அத்தேர்தலில் EPRLF இயக்கத்தின் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அந்த மாகாண சபை 1990 ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

காரணம் அன்றைய நாள் வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள் தன்னிச்சையாக வடகிழக்கு மாகாணத்தை தனிநாடாக தமிழீழப் பிரகடனத்தை செய்து திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அதனைக் காரணம் காட்டி அதன் அடிப்படையில் அந்த வட கிழக்கு மாகாணசபையை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்களால் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாகாண ஆட்சி முறைமை வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட வடிவில் நீண்ட காலமாக இருந்துவந்தது.

அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது தவறானதென்று 2006 /07 /14 ஆம் திகதி ஜேவிபி உச்சநீதிமன்றத்தில் வழக்கை கொடுத்தது. அன்று பதவியிலிருந்த அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது என்றும் அது சட்ட ஒழுங்கு முறைக்கு முரணான வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காரணம் கூறி உச்சநீதிமன்றம் 2006-10-16 இல் தீர்ப்பு வழங்கியது .

அதாவது மாகாண சபை இணைப்பு பிழையானது என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை . மாறாக ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தின் வாயிலாக இணைக்காது அரச இதழ் வாயிலாக அறிவித்தமை சட்ட நடைமுறைக்கு தவறானது என்று கூறியே வடக்கு கிழக்கு இணைப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அதனை அடுத்து 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. அதாவது இங்கு “வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது” என்று தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே அரசுத் தலைவர் இணைக்க வேண்டிய விதத்தில் இணைத்தால் அது அரசியல் சட்டத்துக்கு அமைய செல்லுபடியாகும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எனவே நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து எதிர்கட்சி ஆசனத்தில் இருந்தவர்கள் அன்று அரசாங்கத்துடன் பேசி ஜனாதிபதி மைத்திரிபால அவர்களைக்கொண்டு நாடாளமன்றில் பிரிக்கப்பட்ட வட,கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்தருக்கமுடியும்.

அதனை இந்த சுயநல தமிழ் அரசியல் தலைமைகள் செய்யவில்லை. இப்போதும் கூட வட – கிழக்கை ஜனாதிபதி நினைத்தால் சட்டரீதியாக இணைக்கமுடியும் இன் நிலையில் நீண்ட கால இழுபறிக்கு பின்னர் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.கூ – த.ம.வி.பு கட்சியின் சார்பில் சி. சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராகவும் 2012 – 2015ம் ஆண்டு தேர்தலில் ஐ.ம.சு.கூ – இ.சு.க சார்பில் நஜீப் அப்துல் மஜீத் அவர்களும் பின்னர் தமிழ் தேசியக் கூட்மைப்பு –  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவின் மூலம் ஹாபிஸ் நசீர் அகமது அவர்கள் முதலமைச்சராவும் பதவி வகித்தனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் 2013/09/21 இல் நடைபெற்று விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிவகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின் வடமாகாணசபை 2018 ஒட்டோபர் 23ல் கலைக்கப்பட்டுவிட்டது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் கிடப்பில் கிடக்கிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

சில வேளை அவ்வாறு ஒரு தேர்தல் நடந்தால் 13ம் திருத்தச்சட்டத்தை எதிர்ப்பவர்கள், நிராகரிப்பவர்கள், அதரிப்பவர்கள் என பிரிந்துநின்று வாயால் வாள்வீசி குடும்பி பிடிச் சண்டையிடும் அனைத்துக் கட்சிகளும் நிச்சயமாக போட்டிபோடும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

இதனை சமூகவலைத்தளம் ஒன்றின் கேள்விக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படுமானால் தாம் நிச்சயமாக போட்டியிடுவோம் என பதிலளித்து உறுதிப்படுத்தியுமுள்ளார். இதுவே பதவி மோகம் அரசியல்வாதிகளின் இன்றைய நிலையும் ஆகும். அதேநேரத்தில் சிங்கள தேசத்தை பொறுத்தவரையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்து மூன்றாம் தரப்பு தமிழர் பிரச்சினையில் தலையிடுவதை முற்றாக நிராகரிப்பதையே நோக்காகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிற்தான் இன்று ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசாங்கம் கடந்த நாடாளுமன்ற, மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணசபையை முறைமையை ஒழிப்பது என்ற வாக்குறுதியை முன்வைத்தனர்.

இந்த வாக்குறுதியின் மூலம் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அவர்கள் பெருவெற்றி ஈட்டியுள்ளார் . எனவே மாகாணசபையை ஒழிப்பதற்கான “மக்கள் ஆணையை” சிங்கள தேசத்து மக்களிடமிருந்து ராஜபக்சக்கள் பெற்றிருக்கின்றனர். உருப்படியான அதிகாரமற்ற, அற்ப சொற்ப சலுகைகளை மட்டுமே கொண்ட மாகாணசபைகூட தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடாது என்பதுவே சிங்கள தேசத்தின் விருப்பு. எனவே அதனை ஒழிப்பதற்காகத்தான் சிங்கள மக்கள் ராஜபக்ஷக்களுக்கு “ஆணை”‘ கொடுத்து இருக்கிறார்கள் .

அந்த ஆணையை நிறைவேற்றவே ராஜபக்சக்கள் முனைப்பு காட்டுவார்கள். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள். தமிழ் மக்கள் ஏதேனும் ஒரு சிறிய நலனையேனும் பெற்று அனுபவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்நிலையில் மாகாணசபையை இல்லாதொழிக்கும் ராஜபக்சக்களின் செயல் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதை நிறைவேற்றுவதற்காகத் தமிழர் தரப்பில் ஒரு பகுதியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அதனை இல்லாதொழிக்கான செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக செயற்படுவது என்பது எதிரிக்கு சேவை செய்வதாகவே அமையும். ராஜபக்சக்கள் விரும்புவதை எவர் செய்தாலும் நடைமுறையில் அவர்கள் ராஜபக்சக்களின் அணியைச் சேர்ந்தவர் என்பதே பொருள் . ஆகவே தமிழர் தரப்பில் ராஜபக்சக்கள் விரும்புவதை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் மத்தியில் “நண்பனின் வடிவில் இருக்கின்ற தமிழ் மக்களின் எதிரிகள்” என்பதே உண்மை. எனவே இன்றைய சூழலில் ”எதிரி எதை விரும்புகிறானோ அதை நீ நிராகரி. எதிரி எதை எதிர்க்கின்றானோ அதை நீ ஆதரி”” இதுவே அரசியல் வளர்ச்சியும் அரசியல் தந்திரமுமாகும்.

இதனை தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த 13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு தீர்வாகவும் அமையவில்லை. அமையவும் முடியாது என்பதிற் சந்தேகமில்லை. அதேவேளை இந்த 13ம் திருத்த சட்டவாக்கத்தில் இருப்பவற்றை கடந்த 34 வருடங்களாக சட்ட அமுலாக்கம் செய்யப்படவுமில்லை.

அப்படிச் செய்ய சிங்களப் பேரினவாதம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் அதனை முழுமையாக அமுலாக்கம் செய்யும்படி கேட்பதுதான் இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கடமை. அதனை இந்த நிமிடம் வரைக்கும் ஒரு தமிழ் தலைமயாவது சட்ட அமுலாக்க செய்யும்படி நாடாளுமன்றத்தில் பேசியதோ, அதற்காக போராடியதோ கிடையாது. அதுவே ராஜரீக அரசியற் செயற்பாடு. அதனைவிடுத்து வெறுமனே மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், தெருக்களிலும் ஊளை இட்டு புலம்புவதில் எந்த பலனும் கிடையாது.

இவ்வாறு நீலிக் கண்ணீர் வடிப்பது படு அயோக்கியத்தனமானது. இப்போது 13 திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று போர்க் பறையடிக்கும் தமிழ் தலைவர்கள், தமிழ் கட்சிகள் ஏன் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள் அல்லது அதற்கு எதிராக முன்னின்று போராடவில்லை என்ற கேள்வி முக்கியமானது.

2022 ஆம் வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் அறிவித்த போது உடனே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து , கங்கணம் கட்டி நின்றவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் அரசியல் யாப்பில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உட்பட 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் படி தமிழ் கட்சிகள் போராடியிருக்க வேண்டும். அப்படி போராடாமல் இருந்துவிட்டு பதவிகளையும் சுகபோகங்களையும் அரவணைக்கத் துடிக்கும் தலைவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த அனைத்து அரசியல் கட்சிகளும் செய்கின்ற அயோக்கியத்தனமான தமிழ் மக்கள் விரோத நடவடிக்கையே ஆகும். 13ம் திருத்தச் சட்டம் என்பது ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வல்ல. அதில் தமிழ் மக்களுக்கான எத்தகைய அதிகாரங்களும் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. அதாவது இலங்கை அரசியலில் அரசியல் யாப்பானது வளர்ச்சி விதிக்கு உட்படாமல் மாறாக அது தேய்வுக்கு உட்பட்டு வருவதை காணமுடிகிறது. உதாரணமாக 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பில் இடம்பெற்றிருந்த 29 ஆவது சரத்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

அது 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசு யாப்பில் இல்லாது ஒழிக்கப்பட்டது. அவ்வாறே 13ஆம் திருத்தச் சட்டமும் 2022 ஆம் ஆண்டு வரப்போகின்ற அரசியல் யாப்பில் இல்லாதொழிக்கப்பட்டு விடப்போகிறது. அது தமிழ் மக்களுக்கு மேலும் தீர்வுக்கான வழிகளை தேடும் மார்க்கத்தில் கீழ்நோக்கிய பெரும் சரிவை ஏற்படுத்தும்.

13 ஆம் திருத்தச் சட்டமானது ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வெளி அல்லது மூன்றாம் தரப்பு ஒன்றின் தலையிட்டுக்கான ஒரு வழியாகவும் இருக்கின்றது. எனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒரு புதிய அரசியல்யாப்பை கொண்டுவரப்போகிறார்கள்.

இதன் மூலம் வெளித் தரப்புக்கள் இலங்கையில் தலையிடுவதை வெற்றிகரமாக தடுத்து தமிழ் மக்களை தனிமைப்படுத்தி இலங்கைத் தீவுக்குள் அழித்தொழிக்க சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இதுவே சிங்கள அரசின் திட்டவட்டமான சதிகார இராஜதந்திர வியூகமாகும்.

எனவே 13 திருத்தச் சட்டத்தை நிராகரிப்பது அல்லது ஒழிப்பது என்பதை விடுத்து அதற்கு அப்பால் கடந்து தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை முன்வைத்து அதனைப் பெறுவதற்கான போராட்டத்தையே இந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஜனநாயக ரீதியிலும், ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்க வேண்டும்.

தியாகி திலீபனுக்கு தீபம் ஏற்றுவதில் அக்கறை காட்டுவோர் உண்மையாகவே அவரின் கொள்கையை மதித்து அதன்படி தாமும் முன்நின்று முன்னுதாரணமாய்ப் போராட வேண்டும். 13ஆம் திருத்தம் வேண்டாம் என்பவர்களும், 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்பவர்களும், திலீபனின் வழியில் போராடி தாங்கள் தியாகிகள் என்பதை நிரூபிக்கட்டும். அப்படி ஒரு சிறந்த கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராடினால் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது.

குறைவான 13ம் திருத்தம் வேண்டாம் என்று போராடிக் கொண்டிருப்பதைவிட , நிறைவானதாக எமக்கு என்ன வேண்டுமோ அதனை முதலில் முன்வைக்க வேண்டும். அதனையே கோரிக்கையாக முன்வைத்து அதற்காகப் போராடும் போது ஒரு மேலான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். குறைந்தபட்சம் ஒரு சில தலைவராவது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்.

அவ்வாறு அதை இவர்கள் நடத்திக்காட்டி தங்களை உயர்த்த தலைவர்களாக நிரூபிக்கலாம். மாறாக மற்றவர்களை துரோகிகள் என்று கூறுவதை விடுத்து நீங்கள் தியாகிகளாகுங்கள் என்று இவ்வாறானவர்களுக்கு வரலாறு அழைப்பு விடுக்கின்றது. அப்போது அவர்கள் கூறும் துரோகிகள் தாமாகவே இல்லாது அழிந்துவிடுவர். அதுவே இவர்கள் தமிழ்மக்களுக்கான அரசியலில் செய்யக்கூடிய பங்களிப்பும் ஆகும்.

தி. திபாகரன், M.A.