மத்திய வங்கி ஆளுநருடன் ஹர்ஷ, எரான், கபீர் சந்திப்பு

கடன்களின் நிலைபேறானதன்மை குறித்து உடனடி மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டுக்கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவிற்கு மேற்படாத தொகையில் பேணுவதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினராலும் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கவேண்டுமானால் ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியுறச்செய்யவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதன் காரணமாகவே டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாகப் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கைக் குழுவைச் சேர்ந்த ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் நேற்று புதன்கிழமை காலை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலையும் அதன் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

இச்சந்திப்பின்போது இறக்குமதிகள் மற்றும் வெளிநாட்டுக்கடன்களுக்குரிய கொடுப்பனவைச் செலுத்துவதற்கான இயலுமை, அதிகரித்துச்செல்லும் பணவீக்கம் மற்றும் நிதிமுறைமையின் உறுதிப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ‘நிதித்திரவத்தன்மை தொடர்பில் நிலவும் நெருக்கடியை அரசாங்கம் இன்னமும் குறுங்கால நெருக்கடியாகவே கருதுகின்றது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடனுதவிகளைப்பெறல் பிராந்திய நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதைப் பிற்போடல் என்பன வெளிநாட்டுக்கடன்கள் மற்றும் வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றின் நிலைபேறானதன்மை குறித்த உரியவாறான மதிப்பீடுகளின் பின்னரே மேற்கொள்ளப்படவேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியிருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, பிணைமுறிகளுக்காக எதிர்வரும் ஜுலை மாதம் ஒரு பில்லியன் டொலர்களைச் செலுத்தவேண்டியிருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு முன்னெடுக்கவேண்டிய 8 பரிந்துரைகளை முன்வைத்துவிட்டுக் காத்திருப்பதாக மத்திய வங்கி அதிகாரிகள் தம்மிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி மேலும் நீடிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆட்சி நிர்வாகம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘கடன்களின் நிலைபேறானதன்மை குறித்து உடனடி மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் முன்மொழிந்திருக்கின்றோம். அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுமாறும் நாம் கூறியிருக்கின்றோம். தொற்றுப்பரவலின் பின்னரான நெருக்கடிகளை வங்கிகளும் வணிகங்களும் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது குறித்து விசேட அவதானம் செலுத்துமாறும் நாம் அவர்களிடம் வலியுறுத்தினோம்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.