ஒரு இலட்சம் ரூபாய் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர் உயிரை இழிவுபடுத்தும் ஈனச் செயல்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பீடுகள் தொடர்பாக அண்மையில் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உயிர்களை இழிவுபடுத்தும் ஈனச் செயலாக அமைந்துள்ளது.

அதுவும் குறிப்பாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது அமைச்சின் பெறுமானத்தை விடுத்து யுத்தக்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சட்டவாளர் போல் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், மனித உரிமைகளை மதிப்பவர்களும் சிந்திக்கின்றனர்.

பதவிகளுக்காக சோரம்போன தமிழ் அரசியல்வாதிகள் இதுபற்றி வாயும் திறக்க வில்லை. தமிழர் உரிமைகளை விட பதவி சுகமும், பண வருவாய் தான் இவர்களது இலக்காகும். ஐக்கிய நாடுகள் சபைக்குக் கணக்கு காட்டும் இலங்கை அரசாங்கத்தின் அவமதிப்பான செயலாக இந்த ஒரு இலட்சம் ரூபாய் விடயம் காணப்படுகிறது.

அந்த வகையில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது நம்பிக்கை அடிப்படையில் சரணடைந்தவர்கள், உறவினர்களின் சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக பொறுப்புள்ள அரசாங்கம் மிகவும் வெறுப்பான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஓர் உயிருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒரு முறை மாத்திரமான கொடுப்பனவு என்பது இலங்கையில் மதிப்பிட முடியாத மனித உயிரின் பெறுமதி எவ்வளவு தூரம் இழிவான நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதனைச் சொல்வதற்கு ஆட்சியாளர்க்கு சிறிதளவும் வெட்கம் இல்லாமல் இருப்பது அவர்களது மனப்பாங்குகளின் விகாரத்தை உரித்துக்காட்டுகின்றது.

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சிங்களச் சகோதரருக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட பல கோடி ரூபாய்களோடு ஒப்பிடும் போது தமிழரின் உயிர்ப் பெறுமானம் எமது நாட்டில் எப்படியுள்ளது என்பதை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல கடத்தியவர்கள், ஒப்படைக்கப்பட்ட தமிழர்கள் சரணடைந்த தமிழர்களை அரசின் சார்பாக ஏற்றுக் கொண்ட பொறுப்புள்ள படையதிகாரிகள், படையினர் போன்றவர்களுக்கு எதிராக எந்த நீதி விசாரணையும் இல்லை அவர்களுக்குத் தண்டனைகளும் இல்லை. அவர்களில் பலர் பதவியுயர்வுகள் பெற்று கெளரவமானவர்களாகவும், தேசத்தின் கதாநாயகர்களாகவும் பவனி வருகின்றார்கள்.

ஒரு உண்மை வெளியாகிறது இப்படியான காணாமல் ஆக்கப்பட்டமை அதாவது கொலை செய்யப்பட்டமை என்பதற்குக் காரணமாக இருந்த முக்கியஸ்தர் ஒருவர் அதிகார சக்தியுள்ளவராக இருந்து குற்றவாளிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்கின்றார் என்பதே அதுவாகும்.

மிரிசுவில் இராணுவக் கொலையாளி ஐந்து வயதுக் குழந்தை உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களின் கழுத்துகளை அறுத்து கொலை செய்தமைக்காக நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. அந்தப் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்டடுள்ளார் என்பது நோக்கத்தக்கது.

முறையான நீதி விசாரணை நடைபெறுமானால் ஒவ்வொருவரது பாரதூரமான கோரமுகத்தினையும் சர்வதேசம் கண்டு கொள்ள முடியும்.
எய்தவன் அம்புகளை அன்பு கொண்டு பாதுகாத்துப் பராமரித்து வருகின்றான். அம்புகளை குற்றவாளிகளாக்க எய்தவர்கள் எப்படி விரும்புவார்கள்? அப்படி நடவடிக்கை எடுத்தால் அம்புகள் எய்தவனைக் காட்டிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும்.

இப்படியான நிலைமையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்கின்ற இன அழிப்பின் பழிவாங்கல் பரிமாணம் ஒன்று அடிப்படைவாதிகளால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளாக ஒளித்து மறைத்து பேணப்படுகிறது.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல தமிழர்கள் இந்தக் குற்றவாளிகளை நன்கறிவார்கள், அவர்கள் தான் இதற்கான முக்கியமான சாட்சியங்கள் ஆவர்.

ஒரு லட்சம் ரூபாவினை வாங்கிக் கொண்டு தமது உறவுகள், உரிமைகளை மறந்து விடுவதற்கு தமிழர்கள் அடிமைகளாகவோ, அடிவருடிகளாகவோ இருக்க மாட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்பது நீதியும் நியாயமுமே தவிர வெறும் கண்துடைப்பான ஒரு லட்சம் ரூபாய் பணமல்ல. இந்த அரசாங்கமோ எந்த அரசாங்கமே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கோ தமிழர்களுக்கோ நீதி நியாயத்தை வழங்க மாட்டர்கள் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.

அதாவது சிங்களத் தலைவர்கள் ஓரினத்தவரின் தலைவர்களாக தம்மைக்காட்டுவதன் மூலம் அடுத்த தேர்தலில் அடுத்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக வருவதற்கு விரும்புகின்றார்களே தவிர ஏனைய தமிழ் பேசும் இனத்தவர்களின் தலைவர்களாக இருக்க விரும்பவில்லை.

அதில் இருந்து 74 ஆண்டுகளாக அவர்கள் விரும்பாத சொல்லாத செய்தி என்னவென்றால், தமிழ் பேசும் மக்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமையினைப்பெற உரித்துடையவர்கள் என்பதாகும்.

1948 சுதந்திரத்தின் பின்னர் சமத்துவமாக சமவுரிமை சமவாய்ப்புடன் வாழ நினைத்த தமிழ் பேசும் மக்களை சிங்கள பெளத்த மேலாதிக்கமுடைய சட்டதிட்டங்கள் ஒடுக்கு முறைகளால் சமஷ்டி என்றும், தனிநாடு என்றும், சுயநிர்ணயம் என்றும், சுயாட்சி என்றும் போராட வைத்தமை ஜனநாயகம் அல்லாத இன ஜனநாயக ஒரு பக்கச் சிந்தனையுள்ள சிங்களத் தலைவர்களே ஆவர்.

சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட சேர்.பொன் இராமநாதன், சேர்.பொன் அருணாசலம், ஆறுமுகநாவலர், அறிஞர் சித்திலெப்பை, டாக்டர் டிபி ஜாயா போன்றவர்கள் தேசத்தின் விடுதலையை அந்நியரிடம் இருந்து பெறவே போராடினர்.

அந்நியன் பூட்டிய கைவிலங்குகளைக் கழற்றி விட்டு சொந்த நாட்டவனின் விலங்குகளைக் கொண்டு பூட்டிக் கொள்வதற்காகப் போராடவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் தமிழ்பேசும் மக்களுக்கான சமஷ்டியாட்சி முறையினை அந்நியரிடம் இருந்து பெற்றிருக்கலாம்.

ஒற்றையாட்சி முறையின் கீழ் ஒற்றுமையாக வாழத் தமிழ் பேசும் தலைவர்கள் நினைத்தார்கள். அந்த ஒற்றுமையை சிங்களத் தலைவர்கள் ஏற்படுத்தவில்லை.

அரசியல் இலாபத்திற்காக இனமத அடிப்படைவாதத்தினை விதைத்து நாட்டைக் குட்டிச்சுவராக்கி உள்ளனர். 74சதவீத சிங்களவரின் வாக்குகளைக் குறிவைத்து 26 சதவீதமான தமிழ் பேசும் மக்களை இனமத ரீதியாக வாழவும் விடாமல் சுயநிர்ணய அடிப்படையில் ஆளவும் விடாமல் சிங்கள அதிகாரிகள் ஓடுக்கி வருகிறார்கள்.

சுதந்திர இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை இரண்டாந்தர, மூன்றாந்தரப் பிரஜைகளாக்கி ஆள முற்பட்டதே சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி அரசியலாகும். அதற்கு எடுபிடியாகக் கூடாது என்பதாகவே தமிழர்களின் அகிம்சை, ஆயுதப் போராட்டங்களை நடத்தினார்கள்.

அந்தப் போராட்டத்தை எந்த வழியிலாவது வெல்வதற்காகப் புறப்பட்ட சிங்கள ஆட்சியாளர்கள் வளங்களை விற்று இறைமையினைப் பலவீனமாக்கி கடன் பொறிக்குள் நாட்டை வீழ்த்தி இப்போது கடன்களுக்காக கெஞ்சி திரிகின்றார்கள்.

யுத்தத்திற்காக ஆயுத வியாபாரத்திற்காக நாட்டின் வளங்களைப் பெறுவதற்காக நவகாலனித்துவக் கால்களை ஊன்றுவதற்காக உதவிய நாடுகள் இலங்கையைத் தமது கிடுக்குப் பிடிக்குள் இறுக்கியுள்ளன.

தந்த கடன்களைத் தா அல்லது நாட்டின் வளங்களைத் தா என்ற நிலையில் கடன் வழங்கிய நாடுகள் தமது பிடியை இறுக்கி வருகின்றன.

மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றைச் சமாளிக்கின்ற வழிகளில் ஒன்றுதான் இந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாகும்.

இந்த ஆட்சியாளர்கள் இன மதவாத பிற்போக்கு மாயையால் தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் தான் ஏமாற்றுகின்றார்கள். சிங்கள அதிகாரவர்க்கம் எக்காலத்திலும் திருந்தக்கூடிய நிலையில் இல்லை.

இந்த நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் நிலையான அபிவிருத்திக்கும் ஒரே வழி முறை அதிகாரப்பகிர்வுள்ள சமஷ்டி முறையேயாகும்.

கட்டுரை : ஜி.ஸ்ரீநேசன்,

நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு