ஏ.எவ்.சி. கிண்ண இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டி இன்று : இந்தியா எதிர் இலங்கை

இந்தியாவின் முன்னணி கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான மோகன் பேகன் கழகத்துக்கும் இலங்கையின் சுப்பர் லீக் சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான ஏ.எவ்.சி. கிண்ண இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டி கொல்கத்தா, சோல்ட் லேக் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

ஏ.எவ்.சி. கிண்ணத்துக்கான பிரதான சுற்றில் விளையாடுவதற்கு தகுதிபெறுவதை குறியாகக் கொண்டு இன்றைய போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதவுள்ளன.

எவ்வாறாயினும் புளூ ஸ்டார் அணித் தலைவர் தரிந்து எரங்க விசா பிரச்சினை காரணமாக இந்தியா செல்லாததுடன் உதவி அணித் தலைவர் லஹிரு தாரக்க சில்வா உட்பட மேலும் இருவர் உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இது இவ்வாறிருக்க, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக பிரதான சுற்றில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு அனுகூலமான அணியாக மோகன் பேகன் திகழ்வதாக இந்திய தகவல்களின் பிரகாரம் அறியக் கிடைக்கின்றது.

இண்டியன் சுப்பர் லீக் போட்டியில் மும்பை சிட்டி கழகத்திடம் தோல்வி அடைந்தபோதிலும் இரண்டாம் சுற்று தகுதிகாணில் நேரடியாக விளையாட மோகன் பேகன் தகுதிபெற்றது.

அதேவேளை, அண்மைக்காலமாக மிகச் சிறந்த வீரர்களுடன் இலங்கையின் முன்னணி கழகங்களை எல்லாம் அதிரச் செய்த புளூ ஸ்டார் கழகம் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்கமுடியாது.

மேலும், கத்மண்டு தசரத் விளையாட்டரங்கில் நடைபெற்ற நேபாளத்தின் மச்ஹிந்த்ரா எவ்.சி.யை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம் புளூ ஸ்டார் கழகம் இன்றைய இரண்டாம் சுற்று தகுதிகாணில் விளையாட தகுதிபெற்றது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வழமையான அணித் தலைவர் தரிந்த எரங்க (விசா கிடைக்காததால் இந்தியா செல்லவில்லை) விளையாடமாட்டார் எனவும் உதவித் தலைவர் லஹிரு தாரக்க சில்வா காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் புளூ ஸ்டார் கழக பயிற்றுநர் பண்டா சமரக்கோன் தெரிவித்தார்.

அணியில் இடம்பெறும் மூன்று வெளிநாட்டவர்களில் ஒருவரும் பிரதான முன்கள வீரர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளமையும் பளூ ஸ்டார் அணிக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமைகின்றது.

இவர்கள் அனைவரும் மச்ஹிந்த்ரா அணிக்கு எதிரான போட்டியில் மிகத் திறமையாக விளையாடியிருந்தனர்.

எவ்வாறாயினும் களம் இறக்கப்படும் வீரர்களைக் கொண்டு மொகன் பேகன் அணிக்கு சவாலாக விளையாடவுள்ளதாக அணி பயிற்றுநர் தெரிவித்தார்.

எதிரணியின் பலம், பலவீனத்தை நாம் அறிவோம். எனவே சிறந்த வியூகங்களை அமைத்து இன்றைய போட்டியில் சாதகமான முடிவைப் பெற முயற்சிப்போம் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, மோகன் பேகன் அணியிலும் இரண்டு பிரதான வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேஷ் ஜிங்கன், பிஜி நாட்டைச் சேர்ந்த முன்கள வீரர் ரோய் க்ரிஷ்ணா ஆகியோரே காயமடைந்துள்ளனர். க்ரிஷ்ணாவின் நெருங்கிய உறவினர் மரணமடைந்துள்ளதால் அவர் நாடு திரும்பக்கூடும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.