நம்பிக்கையில்லா யோசனையும், இடைக்கால அரசாங்கமும்! முடிவு அரசாங்கத்தின் கைகளில்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, வெற்றிப் பெறுவதும் பெறாமல் போவதும் தொடர்பாக நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் முன்வைக்கிறது.

இந்தநிலையில் அதற்கு ஆதரவை கோரி பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இதற்கு மத்தியில் நடப்பில் பேசப்பட்டு வரும் இடைக்கால அரசாங்கம், நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றிக்கு பாதமாக அமைந்துவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலக்கி, புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்துக்கு அனுமதியளிக்காது போனால், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனையின்போது, ஆதரவாக வாக்களிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செயற்படும் 41 பேர் குழு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்சவை பதவி விலக்கி. இடைக்கால அரசாங்கத்துக்கு வழியேற்படுத்தினால் அந்த 41பேரும் நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

இதன் காரணமாக நம்பிக்கையில்லா யோசனையை நிறைவேற்ற முடியாதநிலை ஏற்படலாம். நம்பிக்கையில்லா யோசனையை சமர்ப்பிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. ஜேவிபியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனையும் இடைக்கால அரசாங்க யோசனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. எனவே இந்த இடத்தில் அரசாங்கத்தின் கைகளியே தீர்மானம் தங்கியுள்ளது.