ஈழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதானம் மும்முரம்!

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் துப்புரவு செய்யபட்டுள்ளது.

அதேவேளை வழமை போல தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்,மற்றும் கஜேந்திரன் தலைமையில்  கோப்பாய் துயிலுமில்ல முன்னால்  காணி துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் படையினர் முகாமிட்டுள்ள நிலையில் முன்னதாகவுள்ள தோட்ட காணியிலேயே நினைவு தினம் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.

குறித்த காணியே இன்று முன்னணி ஏற்பாட்டில் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றது.

முன்னதாக அங்கு வருகை தந்திருந்த கோப்பாய் காவல்துறையினர் துப்புரவு பணிகளை தடுக்க முற்பட்டனர்.

ஆயினும் அதனை புறந்தள்ளி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சிரமதானப்பணிகளை முன்னெடுத்தவர்களை சிவில் உடையிலிருந்த காவல்துறையினர் வீடியோ பிடிக்க முற்பட கஜேந்திரகுமார் அவர்களை சோதனை செய்திருந்தார்.

அதேவேளை மாவீரர் தினத்தை முன்னெடுக்க இலங்கை ஜனாதிபதி கோத்தபாயாவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்திருந்த போதும் அதற்கு பதில் கிட்டியதாவென்பது தெரியவில்லை.