தீராத குழப்பம் தமிழ் கட்சிகளுக்கிடையில் -யார் முண்டியடித்தது

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பிப்பதில் இழுபறிகள் நீடிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன.

ஒரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருக்கிறது, இன்னொரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணை சபைக்கு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது, இன்னொரு தரப்பு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்கத் தேவையில்லை என்கிறது.

இந்த மூன்று நிலைப்பாடுகளும், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளிடம் இருந்து வந்திருப்பவையாகும்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றைக் கொண்டு வருவதாக அறிவித்தது.

ஆனால் இந்தப் பிரேரணைகள் இரண்டும், இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவில்லை.

கையெழுத்துகள் திரட்டப்பட்ட போதும், 120 பேரின் கையெழுத்து கிடைத்துள்ளதாகவும், 115 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்ட போதும், சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படுவதில் இழுபறி நீடிக்கிறது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டார் என்று கூறப்படுகின்ற போதும், அதனை எதிரணியினாலும் நிரூபிக்க முடியவில்லை.

தமக்கு பெரும்பான்மை இருப்பதாக, 113 பேரின் ஆதரவு இருப்பதாக அவராலும் நிரூபிக்க முடியவில்லை.

அதற்கு முக்கியமான காரணமாக இருப்பது, 10 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கேள்வி தான்.

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள 13 பாராளுமன்ற உறுப்பினர்களில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு விட்டது.

எஞ்சிய 11 உறுப்பினர்களில், 10 பேரைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆரம்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளியான போதும், தற்போதைய நிலையில் அந்த முடிவில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதற்கு முக்கியமான காரணம், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றப்படாமல், அவரை பதவியில் இருந்து அகற்றாமல், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவது ஆபத்தானது என்று கூட்டமைப்பு கருதுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். அதற்கு இன்னமும் நீதியோ நியாயமோ கிட்டவில்லை.

அவரை தமிழ் மக்கள் ஜனாதிபதியாக ஏற்கவில்லை. 90 சதவீதமான தமிழர்கள் அவரை வேண்டாம் என்றே வாக்களித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், அவரைப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆதரவளிக்க, தமிழர் தரப்புகள் விருப்பம் கொண்டிருந்தன.

ஆனால், தற்போதைய நிலையில் தெற்கின் அரசியல் மாறியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவை பலிக்கடா ஆக்கி விட்டு கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் தொடரச் செய்வதற்கான புதியதொரு மாற்றுச் சூழ்ச்சி அரங்கேற்றப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ தாம் விரும்பியவாறு செயற்படுவதற்குத் தடையாக இருப்பவர் மஹிந்த ராஜபக்ஷ தான். ஏனைய அவரது சகோதரர்கள் அரசாங்கத்துக்கு வெளியே அனுப்பப்பட்டு விட்டனர்.

இவ்வாறான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றி விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ தயாராக இருக்கிறார்.

இதன் மூலம் அவர் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறார்.

கோட்டாவுக்கும், மஹிந்தவுக்கும் இடையில் இழுபறி யுத்தம் ஒன்று நடப்பதாக கூறப்படுகின்ற நிலையில், தான் தமிழ்த் தேசிய தரப்புகள் இந்த விடயத்தைக் கவனத்துடன் கையாள வேண்டிய நிலையில் இருக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப் பிரேரணை கொண்டு வரப்படாமல், அரசாங்கத்துக்குக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அதனை அகற்றினால், மீண்டும் கோட்டாவின் தலைமையிலான அரசாங்கமே அமையும்.

அந்த அரசாங்கம், தமிழர் பிரச்சினையை, எவ்வாறு கையாளப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால், அதற்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தனது விசுவாசிகளைக் கொண்ட ஒரு அரசாங்கத்தையே அமைப்பார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் தான் இருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றி விட்டு கோட்டாவைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து அவரை வைத்து தங்களின் இலக்குகளை நிறைவேற்ற முனைகின்றனர்.

இவர்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிரான, விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள்.

சர்வதேச அமைதி முயற்சிகளை குழப்பியவர்கள். போருக்கும் அழிவுகளுக்கும் காரணமானவர்கள்.

இவ்வாறானவர்கள், அதிகாரம் பெறுகின்ற போது, அது தமிழர்கள் மீண்டும் படுகுழிக்குள் விழுகின்ற நிலையே ஏற்படும்.

.
அதனால் தான், நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கலாம் என்று சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

ஏனென்றால், அரசாங்கத்தைக் கவிழ்த்த பின்னர், புதிய அரசாங்கம் எவ்வாறான கொள்கைகளுடன், செயற்படும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் அதற்கு ஆதரவளிப்பது முட்டாள்தனமாகும்.

நாட்டைச் சுடுகாடாக்கி விட்ட அரசாங்கம், ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலான மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அதற்காக தமிழ் மக்கள் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழத் தயாராக இல்லை.

ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டது.

எனவே மீண்டும் ஒருமுறை அவ்வாறான தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியும் கூட ஜனாதிபதி பதவி விலகாமல் ஆட்சியை கவிழ்த்துப் பயனில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

ஏனென்றால் ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரங்கள் உள்ள நிலையில், பாராளுமன்றத்தினாலோ அங்கு பெரும்பான்மை பலம் பெற்ற புதிய அரசாங்கத்தினாலோ எதையும் சாதிக்க முடியாது.

இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டு தான், கூட்டமைப்பு சற்று தயக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

இத்தகைய சூழலைக் கவனத்தில் கொண்டு தான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவோ எதிர்க்கவோ கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

அவரது கூட்டணிக்குள் கூட அந்த விடயத்தில் ஒத்த நிலைப்பாடு இல்லை.

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று அவரது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா கூறியிருக்கிறார்.

நம்பிக்கையில்லா பிரேணை குறித்து, தமிழ்க் கட்சிகள் தீர முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றன.

இந்த நிலையில் வழக்கத்தில் ஒதுங்கி நின்று, வேடிக்கை பார்க்கின்ற – மற்றவர்களைக் கேலி செய்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் முந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்து விட்டு, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும், தாங்கள் பிரேரணையில் கையொப்பமிட்டதால் கோட்டாவின் ஆதரவாளர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கூட்டமைப்பின் போது அழுத்தங்களை பிரயோகிக்க முயல்கின்றது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பது முக்கியமானது. அது நீடிக்கும் வரையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது.

ஆனாலும் அதற்காக தமிழ் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு கையை தூக்குவது, மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற அழிவுக்கே வழிவகுக்கலாம்.