இங்கிலாந்து அணியின் பயிற்றுநராக ப்றெண்டன் மெக்கலம்

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக நியூஸிலாந்தின் முன்னாள் தலைவர் ப்றெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமது ஆடவர் டெஸ்ட் அணியின் பயிற்றுநராக மெக்கலமை நியமித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (12) தெரிவித்தது.

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது பயிற்றுநர் பதவியை 40 வயதான மெக்கலம் ஆரம்பிப்பார்.

அவுஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் அடைந்த படுதோல்வியை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் பயிற்றுநர் பதவியை இராஜினாமா செய்த கிறிஸ் சில்வர்வூடுக்குப் பதிலாகவே புதிய பயிற்றுநராக மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து வெற்றிகரமான சகாப்தத்தை நோக்கி இங்கிலாந்து அணியை முன்னேற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு செயற்படவுள்ளதாக மெக்கலம் தெரிவித்தார்.

‘இந்தப் பதவியை ஏற்கும் இவ் வெளையில் அணி தற்போது எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்களை நான் நன்கு அறிவேன். நாங்கள் அவர்களை நேருக்கு நேர் சந்தித்தவுடன் எனது திறமையைக் கொண்டு அணியை ஒரு பலம்வாய்ந்த சக்தியாக உருவாக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்’ எனவும் மெக்கலம் தெரிவித்தார்.

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியைத்தானும் பெறாத இங்கிலாந்து, கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் 3 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடருக்குப் பின்னர் இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணி முகாமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்துவந்த ஏஷ்லி கய்ல்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் பதவி விலக்கப்பட்டு அண்ட்றூ ஸ்ட்ரோஸ் அப் பதவியை இடைக்கால அடிப்படையில் வகித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து ரொப் கீ புதிய முகாமைத்துவ பணிப்பாளராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் ஜோ ரூட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இதனை அடுத்து பென் ஸ்டோக்ஸ் புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.