கொழும்பில் வரலாற்று மாற்றம்!ராஜபக்ச அரசாங்கத்துக்கு பேரிடி?

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதிவரை நடத்தப்பட்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் இழப்புக்களை அர்த்தப்படுத்தி, அதனை ஒரு பலமான அரசியல் வலுவாக்கவேண்டிய தார்மீகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று பூகோள ரீதியில் உணர்வுமயமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகம் தமிழகம் மற்றும் புகலிடநாடுகளில் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

தலைநகரில் வரலாற்று மாற்றம்!! சிறிலங்கா அரசாங்கத்துக்கு பேரிடி

கடந்த 13 ஆண்டுகளாக தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட நினைவேந்தல்களுக்கு அப்பால் முதற்தடவையாக கொழும்பில் சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபாயவின் செயலகம் அமைந்துள்ள காலிமுகத்திடல் பகுதியில் சிறிய நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயரிடப்பட்டு சிங்கள மக்களின் பிரசன்னத்துடன் காலையிலும் மற்றும் மாலையிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக காலிமுகத்திடல் கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தலைநகரில் இன்று நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். இன்று கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வுகளை தலைநகரில் உள்ள மேற்குலக இராஜதந்திரிகளும் உன்னிப்பாக அவதானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009 இறுதி யுத்தத்தின் போது மகிந்தவின் தலமையில் இருந்த சிங்கள இனவெறி அரசு மேற்குலக துணையுடனும் தடை செயப்பட்ட ஆயுதப் பிரயோகங்களுடனும் அப்பாவி தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்து விட்டு, யுத்த வெற்றி எனும் பெயரில் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக யுத்த வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடியது.

இன்று எந்த மக்களை கொன்று விட்டு யுத்த வெற்றி கொண்டாட்டம் இடம்பெற்றதோ? அதே யுத்தத்தில் இறந்த மக்களுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலின் நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை காலமும் (கடந்த 13 ஆண்டுகளாக) பெரும்பான்மை இனத்தவர்களால் யுத்த வெற்றி கொண்டாடப்பட்ட இடத்தில், மூவின மக்களும் ஒன்றுசேர்ந்து இன அழிப்பு தினத்தை அனுஷ்டித்துள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு பேரிடியாக மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.