கடந்த 9 ஆம் திகதி நாட்டில் வன்முறைகளில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பில் அரச எம்.பி. க்களுக்கும் ஜே .வி.பி. க்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டதால் சபை அமளிதுமளிப்பட்டதுடன் ஜே .வி.பி.யினால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு எம்.பி. க்கள் பிரதி சபாநாயகரிடம் முறையிட்டனர்.
பாராளுமன்றத்தில் இன்று நான்காவது நாளாகவும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று விவாதத்தில் உரையாற்றிய ஜே .வி.பி.பிரசார செயலரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் உரையாற்றுகையில்,
அரச தரப்பினர் வன்முறை சம்பவத்துக்கு ஜே.வி.பி மீது தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்ததுடன் வன்முறைகளில் ஈடுபட்ட அரச தரப்பின் பல உள்ளூர் அரசியல் பிரமுகர்களையும் அம்பலப்படுத்தினார்.
இதனால் வன்முறையில் வீடுகள், சொத்துக்களை இழந்த அரச தரப்பு அம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் வீரசிங்க எழுந்து, ஜே .வி.பி.யே வன்முறைகளின் சூத்திரதாரி, ஜே .வி.பி.யின் உள்ளூர் அரசியல் வாதிகளே வன்முறைகளை முன்னின்று நடத்தினர் என்று குற்றம்சாட்டியதுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டார்.
இதனையடுத்து விஜித ஹேரத் எம்.பி. க்கும் அரச தரப்பு எம்.பி.க்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் எற்பட்டது. வன்முறைகளில் ஈடுபட்ட அரச தரப்பினரின் பெயர் விபரங்களை விஜித ஹேரத் கூறியதுடன் சில புகைப்படங்களையும் சபைக்கு காட்டினார். இதன்போது பதிலுக்கு, வன்முறைகளில் ஈடுபட்ட ஜே .வி.பி. உறுப்பினர்களின் பெயர்களை அரச தரப்பினர் கூற சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஒரு கட்டத்தில் விஜித்த ஹேரத் எம.பி. வீரசிங்க எம்.பியை பார்த்து, உங்கள் பிரதேசத்தில், அநியாயமாக சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு நீங்கள்தான் காரணம். அதனால் நீங்கள் கிராமங்களுக்கு வரும்வரை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.
இதனையடுத்து எழுந்த வீரசிங்க எம்.பி, எனது விஜித்த ஹேரத்தின் கூற்றினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ்விடம் கோரிக்கை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த பிரேமநாத் சி தொலவத்த, விஜித்த ஹேரத்தின் கருத்து தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்
இதன்போது பிரபல நடிகையும் அரச தரப்பு எம்.பி. யுமான கீதா குமாரசிங்க, தனது வீட்டை ஜே .வி.பி.யினரே தாக்கியதாக கூறியதுடன் ஜே .வி.பி. உறுப்பினர்கள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டதுடன் சிசிடி வி கமராவில் அவர்களின் முகங்கள் நன்கு பதிவாகியுள்ளதாகவும் கூறினார். அத்துடன் வீட்டை சேதப்படுத்தினாலும் பரவாயில்லை. சினிமாத்துறையில் தனக்குக் கிடைத்த, தான் உயிராக மதிக்கும் பல விருதுகளையும் உடைத்து நொறுக்கிவிட்டதாக கூறி கண்ணீர் விட்டார்.
இவ்வாறு விஜித்த ஹேரத்துக்கும் அரச தரப்பு எம்.பி.க்களுக்குமிடையிலான இந்த தர்க்கம் சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு இரு தரப்பையும் பிரதி சபாநாயகர் அமைதிப்படுத்தி சபையை தொடர்ந்து கொண்டுசென்றார்.