அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ்

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது.

தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

151 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சிக் கூட்டணி 73 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஆளும் லிபரல் கட்சிக் கூட்டணிக்கு 51 ஆசனங்கள் கிடைத்துள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் வெற்றியீட்டியுள்ளர்.

இதனால் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸ் (Anthony Albanese) அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இத்தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு தசாப்த காலத்தில் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

நாளை மறுதினம் திங்கட்கிழமை தனது தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாக அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் இரு தினங்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் தான் பங்குபற்றவுள்ளதாகவும் அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.