5 மாதங்களில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 211 பேர் கைது – கடற்படை தெரிவிப்பு

வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக இடம்பெயரும் சம்பவங்கள் நாட்டிலிருந்து அதிகரித்துள்ளன. எனவே இது தொடர்பில் தீவிர கண்காணிப்பினை முன்னெடுத்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் இதுவரையில் சட்ட விரோதமாக இடம்பெயற முற்பட்ட 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்த செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை சல்லி, சாம்பல் தீவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் போது 2 முச்சக்கர வண்டிகளும் கெப் வாகனமொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்கு படகில் தயாராகவிருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தலில் ஈடுபடும் 05 சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும் 07 பெண்களும் சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிலாவெளி மற்றும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

எந்தவொரு பிரஜையும் ஒரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெறுவது சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும். அதற்கமைய இலங்கை பிரஜையும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இலங்கையின் குரவரவு – குடியகல்வு சட்டத்திற்கமைய இடம்பெயர்விற்கான சட்ட கட்டமைப்பொன்று காணப்படுகிறது. இந்த சட்ட கட்டமைப்பிற்கு உட்படாத எந்தவொரு இடம்பெயர்வும் சட்டவிரோதமானதாகும்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான சட்ட விரோத இடப்பெயர்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள சில குழுக்கள் அதன் மூலம் பெரும் மோசடிகளில் ஈடுபடுகின்றமை வருத்தமளிக்கிறது.

ஆட் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சட்ட விரோதமாக இடம்பெயர முற்பட்ட 211 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து 74 பேரும் , யாழ்ப்பாணத்திலிருந்து 17 பேரும் , புத்தளத்திலிருந்து 13 பேரும், மட்டக்களப்பிலிருந்து 40 பேரும் மற்றும் திருகோணமலையிலிருந்து 67 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி பிரதேசத்திலிருந்து கடந்த முதலாம் திகதி வெளியேறி அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 12 பேர் அவுஸ்திரேலிய எல்லை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , கடந்த 22 ஆம் திகதி மீள நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதே போன்று இந்தியாவிற்கு சட்ட விரோதமாகச் சென்ற 86 இலங்கையர்கள் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சட்ட விரோத இடப்பெயர்வுடன் நேரடியாக தொடர்புடையவர்களாவர். பாதுகாப்பற்ற மீன்பிடிக் கப்பல்கள் மூலமான சட்டவிரோத குடியேற்றத்திற்கான முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை.

அறியாமையால் கொள்ளையர்களின் சூழ்ச்சியில் சிக்கி உயிரைப் பணயம் வைப்பது பற்றி இலங்கையர்கள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பற்ற சிறிய படகுகளில் பயணம் செய்வது மரணத்தின் விளிம்பில் உள்ளதைப் போன்று ஆபத்தானதாகும். இவ்வாறு பாதுகாப்பற்ற படகுகளில் பயணித்து அவை விபத்திற்குள்ளாகிய போது , அதனை கடற்படையினர் காப்பாற்றிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

சட்ட விரோதமாக ஒரு நாட்டில் வசிக்கும் எந்தவொரு பிரஜையையும் கைது செய்யும் அதிகாரம் அந்தந்த நாட்டு அரசாங்கத்திற்கு உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் அவுஸ்திரேலிய கடற்படையினரால் 12 பேர் கைது செய்யப்பட்டமையாகும். சட்ட விரோத இடம்பெயர்வு தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வருகிறது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள குடிவரவு – குடியகல்வு சட்டங்களை மீறி, குறுகிய மற்றும் இலாப நோக்கங்களுக்கு அடிமையாகி இலங்கையிலிருந்து வெளியேற முயல்வது முட்டாள்தனமானதாகும் என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.