அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; சமூகவலைத்தளத்தில் முன்கூட்டியே தகவலை பகிர்ந்த குற்றவாளி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நிகழ்த்தியது 18 வயதுடைய சால்வேடார் ராமோஸ் என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் ராமோஸ் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாடசாலைக்கு வருவதற்கு முன்பாக ராமோஸ் வீட்டில் தனது பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீப காலமாக அங்கு பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை, உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்கூட்டியே தகவல் பகிர்ந்தது தெரிய வந்துள்ளது.

முன்னதாக ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கிகளுடன் செல்பி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து முன்பின் தெரியாத ஒரு பெண்ணை டேக் செய்த ராமோஸ், ஒரு ரகசியம் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் கடந்த செவ்வாய்கிழமை காலை 5.43 மணிக்கு, தான் ஒரு செயலை செய்யப்போவதாக மீண்டும் அப்பெண்ணிற்கு செய்தி அனுப்பியுள்ளார். அது என்ன செயல் என்று அப்பெண் கேள்வி எழுப்பிய நிலையில், அதனை தான் காலை 11 மணிக்கு முன்பாக சொல்வதாக ராமோஸ் கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரகசியம் இருப்பதாக பலமுறை குறுஞ்செய்தி அனுப்பிய ராமோஸ், கடைசி வரை அது என்ன என்று தன்னிடம் தெரிவிக்கவில்லை என அப்பெண் தெரிவித்துள்ளார்.