இந்தியாவிடம் கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க கோரும் சர்வதேச நாணய நிதியம்

கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

கோதுமை உற்பத்தியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தாண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெப்பம் காரணமாக கோதுமை உற்பத்தி, 4.4 சதவீதம் குறைந்து, 10 ஆயிரத்து 600 கோடி கிலோவாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில், கிறிஸ்டினா ஜியார்ஜிவா தெரிவித்ததாவது,

இந்தியாவில், 135 கோடி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க வேண்டிய நிலையில் அந்நாடு உள்ளது. இருந்தும், உலக மக்கள் நலன் கருதி கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்தியாவை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.