இறுதிப் பந்தில் இலங்கையை வெற்றிகொண்ட பாகிஸ்தான் மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியது

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கராச்சியில் சனிக்கிழமை (28) மிகவும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

Pakistan celebrate their 3-0 victory over Sri Lanka, Pakistan vs Sri Lanka, 3rd T20I, Karachi, May 28, 2022

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது.

கடைசி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை, 34 பந்துகளில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலையை அடைந்தது. அத்துடன் 5 வீராங்கனைகள் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனது அதன் தோல்விக்கு காரணமாக அடைந்தது.

ஹாசினி பெரேரா (24), அணித் தலைவி சமரி அத்தப்பத்து (37) ஆகிய இருவரும் இந்தத் தொடரில் முதல் தடவையாக சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இவரும் 11 ஓவர்களில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்ததால் இலங்கை அணி கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 12ஆவது ஓவரின் முதல் 2 பந்துகளில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கையின் சரிவும் ஆரம்பித்தது.

தொடர்ந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேலும் 5 விக்கெட்கள் சரிந்தன.

அனுஷிகா சஞ்சீவனி (14 ஆ.இ.), சுகந்தி குமாரி (10) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 24 ஓட்டங்களைப் பகிரந்து இலங்கை 100 ஓட்டங்களைப் கடப்பதற்கு உதவினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் சார்பாக 6 துடுப்பாட்ட வீராங்கனைகள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தமது அணி வெற்றி பெற உதவினர்.

பாகிஸ்தான் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் இலங்கைக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடைசிப் பந்தில் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

துடுப்பாட்டத்தில் முனீபா அலி (25), ஆலியா ரியாஸ் (17), அணித் தலைவி பிஸ்மா மாறூவ் (15 ஆ.இ.), நிடா தார் (14) ஆகியோர் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

இலங்கை பந்துவீச்சில் ஓஷாதி ரணசிங்க 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.