ஶ்ரீலங்காவிற்கு உதவுவதற்கான வழிமுறைகளை பிரித்தானியா தொடர்ந்து முன்னெடுக்கும்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகள் உள்ளடங்கலாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கக்கூடிய முறைகள் தொடர்பில் பிரிட்டன் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான அந்நாட்டுத்தூதுவர் சாரா ஹல்டன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜீ.எல். பீரிஸுக்கு வாழ்த்துத்தெரிவிக்கும் நோக்கில் அவருடன் நிகழ்த்திய சந்திப்பின்போதே இலங்கைக்கான பிரித்தானியத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இருதரப்புத்தொடர்புகள், உள்ளக விவகாரங்கள் மற்றும் நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சியடைவதற்கு அவசியமான சர்வதேச உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற போதிலும் அத்தியாவசியப்பொருட்களின் விநியோகம் உரியவாறு நடைபெறுவதை உறுதிசெய்வதில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தம்மால் புரிந்துகொள்ளமுடிவதாகவும், இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகள் உள்ளடங்கலாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கக்கூடிய முறைகள் தொடர்பில் பிரிட்டன் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.