அரசியல் சூதாட்டமே 21 ஆவது திருத்தச் சட்ட வரைபு – சஜித்

தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக முடியாதவர்கள் , சதித்திட்டத்தின் மூலம் ஜனாதிபதியாவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் சூதாட்டமே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஆகும்.

அதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள திருத்தத்தினை புறந்தள்ளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் திருத்தமொன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமானது அனைவராலும் எதிர்பாரக்கப்படும் மாற்றத்திற்கான வழியமைப்பதாக இருக்க வேண்டும்.

அதற்கமையவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி , சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்த 20 ஆவது திருத்தத்தினையும் இரத்து செய்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டக் கூடிய அரசியலமைப்பு திருத்தம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.

இதில் அரசியல் மறுசீரமைப்பு, வெளிப்படை தன்மையுடைய ஆணைக்குழுக்கள், சுயாதீன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக உள்ளடக்கங்கள் காணப்பட்டன.

இதனை வெற்றி கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னின்று செயற்படும். எனினும் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு முற்படுபவர்களால் எமது இந்த திருத்தத்தினை புறக்கணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாகவே எம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் , சர்வசன வாக்கெடுப்பும் அவசியமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்காக செயற்படுபவர்களும் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கான கனவில் மிதப்பவர்களுமே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்குவதற்கும் , சர்வாதிகார 20 ஆவது திருத்தத்தினை நிiவேற்றுவதற்கு கூட இந்தளவு சவால் காணப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் நிறைவேற்றதிகார முறைமையை நீக்கும் திருத்தத்திற்கு ஏன் 150 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆதரவளிக்க முடியாது? ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்காக 21 மழுங்கடிக்கப்படுவது ஏன்?

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்று வங்குரோத்து நிறைவேற்றதிகார முறைமை நீக்கப்பட வேண்டும். நிறைவேற்றதிகாரத்தின் தன்னிச்சையான தீர்மானமே நாடு வங்குரோத்தடையக் காரணமாகும்.

தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாதவர்களே சதித்திட்டத்தின் மூலம் ஜனாதிபதியாக முற்படுகின்றனர். அதற்கான அரசியல் சூதாட்டமாகவே 21 ஆவது திருத்ததினை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார்.