இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள்!ஐ.நா.குழுவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் வெகுவாக மோசமடைந்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 135 ஆவது கூட்டம் எதிர்வரும் ஜூன் 27 – ஜூலை 27 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்திற்கு நடைபெறவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு அமைவான இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அதனை முன்னிறுத்தி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களின் சுருக்கம் வருமாறு,

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் கடந்த 2020 ஒக்டோபர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திருத்தமானது, ஜனநாயக ஆட்சி மற்றும் முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வரவேற்கப்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு மறுசீரமைப்புக்களை மீண்டும் இல்லாமல்செய்தது.

அரசியலமைப்புப்பேரவையை நீக்கியமை, சிரேஷ்ட நீதிபதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு உள்ளடங்கலாக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய கட்டமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளடங்கலாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடைய அதிகாரிகள் போன்றோரின் நியமனங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியமை ஆகியவற்றின் மூலம் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் காணப்பட்ட மட்டுப்பாடுகளை நீக்கியது.

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தரமிறக்கப்பட்டது.

அதேபோன்று புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 2021 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 9 பேரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி கடந்த 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆற்றிய உரையில், புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ‘அடுத்த ஆண்டிற்குள் வெளியிடப்படும்’ என்று குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையற்ற வகையில் இயங்கியதும், விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் செயற்படாததுமான அந்தக்குழுவின் அறிக்கை இவ்வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவ்வறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

அடுத்ததாக அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமையானது எந்தவொரு சட்டத்திற்கும் அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இந்த அவசரகாலச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக பலதரப்பட்ட அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டம் சுமார் 4 மாதங்கள்வரை நீடித்தது. குறித்த அவசரகாலச்சட்ட வழிகாட்டல்கள், குற்றமிழைத்தமைக்கான எவ்வித ஆதாரங்களுமின்றி முஸ்லிம்கள் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படுவதற்கு வழிவகுத்தமை தொடர்பில் நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.

மேலும் இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவோ அல்லது மாற்றியமைப்பதாகவோ வாக்குறுதியளித்த போதிலும், அவ்விடயத்தில் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தன்னிச்சையான தடுத்துவைப்பு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படல் உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவகையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட சரத்துக்களை நீக்குவதாகவோ அல்லது அவற்றுக்குத் தீர்வை வழங்கக்கூடியவகையிலோ அமையவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின்கீழ் பெருமளவானோர் தன்னிச்சையாகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டனர்.

கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அவரது அரசாங்கம், தமது அரசியல் எதிரிகளையும் சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களையும் இலக்குவைப்பதற்குப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியது.

அதுமாத்திரமன்றி அச்சட்டத்தின் ஊடாக கடந்தகால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், சட்டத்தரணிகளும், ஊடகவியலாளர்களும், சிவில் சமூகப்பிரதிநிதிகளும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவை மாத்திரமன்றி பாரதூரமான மனித உரிமை மீறல்கள், முக்கிய வழக்கு விசாரணைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமின்மை, சுயாதீன நீதிக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள், ஆண் – பெண் சமத்துவமின்மை, கருக்கலைப்பு தொடர்பான சட்டங்கள், முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், பாலினத்தை அடையாளம் காண்பதிலுள்ள மட்டுப்பாடுகள், பாலின அடிப்படையிலான வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.