முல்லைத்தீவு பாலைப்பாணியில் வன வளத் திணைக்களத்தினால் திருடப்பட்ட காணிகளை -தென்னிலங்கை சிங்களவர்கள் கைப்பற்ற திட்டம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகள் வனவளத்திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் நேற்று 04 ஆம் திகதி கனரக வாகனங்களைப்பயன் படுத்தி வெளியாட்களால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காடுகள் நேற்றும் நேற்று முன்தினமும் விடுமுறை நாட்களில் வெளியாட்களால் கனரக வாகனங்களை பயன்படுத்தி துப்புரவு செய்யப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் 75 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் 15 வரையான குடும்பங்களுக்கு மாத்திரமே சொந்தக் காணிகள் உள்ளன.

ஏனைய குடும்பங்களுக்கு பயிர்செய்கை காணிகள் இல்லாத நிலையில் அவர்களுக்கான காணிகளை பெற்றுத்தருமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் காணிகளை வழங்க இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆனால் வெளியிடங்களில் இருந்து வருகின்ற பணவசதி படைத்தவர்கள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் குறித்த பிரதேசத்திற்குட்பட்ட கும்மா குளம் பகுதியில் பாரிய அளவில் காடழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

விடுமுறை நாட்களில் இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது இந்த செயற்பாடானது வளத் திணைக்கள அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற சந்தேகம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வனவளத் திணைக்கள அதிகாரிகளின் வட்டார அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலேயே இவ்வாறு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.