21வது திருத்தம் – மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இழுபறிநிலை

21வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் குறித்து இழுபறி நிலை காணப்படுகின்றது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி பிரதமர் நீதியமைச்சர் ஆகியோர்கள் மத்தியில் நேற்று இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று இது தொடர்பில் பிரதமரும் நீதியமைச்சரும் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்கவேண்டுமா? பிரதமரைநீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் அமைச்சர்களை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் ஆகிய விடயங்கள் குறித்து இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயங்கள் பிரதமரினதும் நாடாளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரிப்பதுடன் நேரடியாக தொடர்புபட்டவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் ஸ்திரதன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே மேலதிக உதவியை வழங்கவேண்டும் என இராஜதந்திர சமூகமும் இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகமும் கருதுவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய விவகாரங்கள் குறித்த யோசனைகளிற்கு அப்பால் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது குறித்த விடயமும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என அதிகாhரிகள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதை கட்டுப்படுத்தவேண்டும் என்ற யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கின்றனர்.