ஞானாக்காவாக மாறி ராஜபக்ச அரசை பாதுகாக்கும் ரணில் !

  அனுராதபுரம் சோதிடர் ஞானாக்காவின் வேலையையே தற்போது ரணில் செய்து வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

  பத்மநாபாவின் 32 ஆவது நினைவு தினமும் தியாகிகள் தினமும் இன்று வவுனியாவில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

  யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என கூறி பல பில்லியன் கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து கடனாக பெற்றதன் விளைவே இன்று நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

  இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தமிழ் கட்சிகளுக்கிடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது.

  இலங்கைக்கு இந்தியா நிபந்தனை இன்றி கடன் வழங்க கூடாது
  பொருளாதார நெருக்கடியான நிலையில் நாம் சாப்பாட்டு பிரச்சினையை மாத்திரமே கதைக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளை பற்றி பேச இது சந்தர்ப்பம் இல்லை என சிலர் கூறுகின்றனர்.

  இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளிடம் ஆயுதத்தினை கொள்வனவு செய்து யுத்தத்தினை செய்து முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தினை நிலைநாட்டவுள்ளதாக கூறினார்கள்.

  ஆனால் இன்று யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளாகியும் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள மாகாணசபையை கூட நடத்த முடியாதுள்ளது. இந்த நிலையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல சர்வதேச நாடுகள் முன்வந்தாலும் கூட இலங்கை எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. இந்தியா உதவிகளை வழங்கி வருகின்றது.

  எனவே இந்த சூழலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் வலியுத்த வேண்டிய விடயம் இலங்கைக்கு வழங்கும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட நிபந்தனை இன்றி வழங்க கூடாது என்பதே.

  இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மேசையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு நாம் கையாளப்போகின்றோம்.

  இந்தியாவிடம் கூட்டாக கோரிக்கை
  இந்தியாவிடம் எவ்வாறு கூட்டாக கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என எந்தவித பேச்சுக்களையும் நடத்தவில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினை பாதுகாக்கும் செயற்பாட்டையே ரணில் விக்ரமசிங்க செய்துகொண்டிருக்கின்றார்.

  நாள் தோறும் நாட்டில் எரிபொருள் நெருக்கடி, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு பஞ்சம் வரப்போகின்றது என, அனுராதபுரத்தில் இருந்க்கும் மகிந்த கோட்டாபயவுக்கு வேண்டிய ஞானாக்கா சோதிடம் கூறினாரோ அதேபோன்ற தான் ஆருடம் கூறும் வேலையையே ரணிலும்,கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினை பாதுகாக்கும் வேலையை செய்துகொண்டிருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 32வது தியாகிகள் தினம் வவுனியாவில் அமைந்துள்ள முன்னணியின் காரியாலயத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜாதலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.

  இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தலைவர் இ.கௌதமன், ,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா,மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.