கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்று (25) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று(24) கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அங்கு சமூகமளித்திருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.சரவணபவன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து அதற்கு எதிராக இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ளவர்கள் மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்கின்றனர், அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர். மது போதையில் இருப்பவர்கள் தொழில் அடையாள அட்டையை பரிசோதிக்கின்றனர்.

எனவே இவ்வாறான சம்பவங்களை நிறுத்த வேண்டும். அத்தோடு சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், சுகாதார ஊழியர்களுக்கு என கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிறுத்தி கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்திற்கு மாற்றுமாரும், சுகாதார பணிப்பாளர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.