அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் இலங்கை

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ப்ரபாத் ஜயசூரிய 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்து அசத்திய பின்னர் இலங்கை தனது துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது.

காலி மைதானத்தை அண்மித்த காலி கோட்டை பகுதியில் அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோதிலும் டெஸ்ட் போட்டி சுமுகமாக நடைபெற்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக் பிரிவு தெரிவித்தது.

அணித் தலைவர் திமுத் கருணராட்ன, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கையை பலப்படுத்தினர்.

போட்டியின் 2ஆம் நாளான இன்று சனிக்கிழமை (09) காலை 298 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 364 ஓட்டங்களாக இருந்தது.

ப்ரபாத் ஜயசூரிய மேலும் 3 விக்கெட்களை இன்று வீழ்த்தியதுடன் அவுஸ்திரேலியாவின் கடைசி 5 விக்கெட்கள் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ப்ரபாத் ஜயசூரிய 36 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு 6 வீக்கெட்களை வீழ்த்தினார்.

தனது துடுப்பாட்டத்தை 109 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 145 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். 272 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித், 16 பவுண்டறிகளை அடித்தார். அலெக்ஸ் கேரி 28 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார்.

போட்டியின் முதலாம் நாளான வெள்ளிக்கிழமையன்று மார்னுஸ் லபுஸ்சான் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரியவைவிட கசுன் ராஜித்த 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க (6) ஆட்டம் இழந்த பின்னர் திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 164 ஓட்டங்களாக உயர்த்தினர்.

திமுத் கருணாரட்ன 10 பவுண்டறிகளுடன் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்ட நேர முடிவில் குசல் மெண்டிஸ் 84 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மெத்யூஸ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.