சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை பேணக்கூடிய படித்தவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – விஜயதாஸ

நாட்டின் எதிர்காலத்தை நிர்வகிக்கக் கூடிய அத்துடன் சர்வதேச நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை பேணக்கூடிய படித்த, ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டிய அவசியம் காணப்படுகிறது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இணக்கப்பாட்டுடன் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு நாம் முயற்சித்தோம். அந்த முயற்சி தோல்வியடைந்தது.பாராளுமன்ற ஜனநாயகத்தின்படி எவருக்கும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கும் உரிமை உள்ளது.

அதற்கிணங்க தற்போது மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.பொதுஜன பெரமுன கட்சி கட்சி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நிறுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவில் ஒருவரை முன்மொழிந்துள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் ஒரு திரிபு நிலை காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அரசியலமைப்புக்கு இணங்க விருப்பமான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வாக்களிப்பில் உங்கள் கொள்கை என்ன என ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

இதில் நான் கட்சி வர்ணம் என பார்க்கவில்லை. எனினும் நாட்டுக்கு தற்போது படித்த முகா மைத்துவம் தெரிந்த எதிர்காலத்தை நிர்வகிக்கக்கூடிய அனுபவம் நிறைந்த குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை சிறப்பாக பேணக் கூடிய ஒருவரே அவசியமாகவுள்ளார். அந்த வகையில் அதனை கவனத்திற் கொண்டு எவரும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். எனது அளவு கோலும் அதுவாகும் என்றும் என்றார்.