பல்கலைக்கழக மாணவர் வெள்ளை வானில் கடத்தல் – இரவோடு இரவாக தொடரும் மாணவர்களின் போராட்டம்

களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இந்த மாணவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு பின்னர் வீதியில் விடப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு அவரின் சுயவிபரங்கள் திரட்டப்பட்டுள்ளது.

மேலும்,களனி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர் மீதான இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தும் வரை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடரும் எனவும்,இரவோடு இரவாக வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.