கட்சியிலும் எதிர்ப்பு – ஜோ பிடனுக்கு தொடரும் அழுத்தம்

புதிய இராணுவ அமைச்சரை நியமிக்கும் விவகாரத்தில், அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.

ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய இராணுவ அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று கருப்பின தலைவர்கள், ஜோ பிடனுக்கு அழுத்தம் தந்து வருவதாக வொஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் பைடன் புதிய இராணுவ அமைச்சராக, அந்தத் துறையின் முன்னாள் துணை அமைச்சர் மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தெரிவு செய்ய விரும்புகிறார். இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

மிச்செலி புளூர்னாயின் கடந்த கால வரலாறு, தனியார் துறையுடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இவர்களது அழுத்தங்கள் ஜோ பிடனுக்கு தலைவலியாக மாறி உள்ளது.

இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி லாயிட் ஆஸ்டின், பென்டகன் இராணுவ தலைமையகத்தின் மூத்த சட்டத்தரணி ஜே ஜோன்சன் உள்ளிட்டோரும் இராணுவ அமைச்சர் பதவியை பெறும் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள ஜோ பிடன், தனது அமைச்சரவையில் இடம் பெறப்போகிறவர்களை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.