ஜனாதிபதி தேர்தலில் இவருக்கு வாக்களித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்!

தமிழர் மனங்களை புண்படுத்தும் விதத்தில் பேசிக்கொண்டுள்ள சரத் பொன்சேக்காவிற்கா ஜனாதிபதி தேர்தலில் எமது மக்கள் அதிகளவில் வாக்களித்தனர் என்பதை என்னும்போது மன வேதனையை தருகின்றது.

ஒருவேளை அவர் ஜனாதிபதியாகியிருந்தால் எமது மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என நினைத்து இப்போது அச்சமடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மாவீரர் தினம் குறித்தும், யுத்த வெற்றிகள் குறித்தும் சரத் பொன்சேகா நேற்று சபையில் தெரிவித்தார். இதன்போது தற்போது வடக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரெவி புயல் மாவீர் தினமன்று வந்திருந்தாள் மகிழ்ச்சியடைந்திருபேன் என கூறினார்.

இந்த கருத்து மிகவும் மோசமானதொரு கருத்தென்பதுடன் இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படியான சிந்தனையுள்ள ஒருவருக்கு எமது மக்கள் வாக்களித்தனர் என்பதை நினைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது, மன வேதனையளிக்கிறது.

கடந்த தேர்தல்களில் எமது மக்களின் கூடுதலான வாக்குகள் அவருக்கே வழங்கப்பட்டது. ஒருவேளை இந்த சிந்தனையில் உள்ள ஒருவர் ஜனாதிபதி ஆகியிருந்தால் எமக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கும் போது அச்சப்படவேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்து சரத் பொன்சேகாவிற்கு எமது மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் எமது மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளுக்கு அர்த்தமில்லாது போய்விட்டதாக இப்போது நான் கருதுகிறேன்.

அவர் அண்மைக்காலமாக கூறிவருகின்ற கருத்துக்கள் அனைத்துமே எமது மக்களை புண்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளது. அதனை எண்ணி மனவருத்தப்படுகின்றேன்.

விடுதலைப்புலிகளை அரசாங்கம் எதிர்க்கிறது என்பது உண்மையே, ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்து இறந்தவர்களை அனுஷ்டிக்க அவர்களின் உறவுகளுக்கு உரிமை உண்டு.

மனிதாபிமான எவரும் இதனை எதிர்க்க முடியாது. அவ்வாறு இருக்கையில் அன்றைய தினம் புரவி புயல் வந்திருக்க வேண்டும் என கூறியது மட்டமாக சிந்தனையின் வெளிப்பாடு என்றே நான் கூறுவேன். எனது எதிர்ப்பையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.