இந்தியா செல்லும் ரணில் கொடுக்கப்போவது என்ன..! பெறப்போவது என்ன..!

எதிரியைச் சுற்றி வளைத்துத் தான் விரும்பியதை எதிரியைக் கொண்டு செய்யவைத்து தனக்குச் சேவகம் செய்விப்பதுதான் சிறந்த ராஜதந்திரமாகும். அத்தகைய ராஜதந்திரச் செயற்பாட்டில் சிங்கள ராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள்.

தென்னாசிய நாடுகளின் ராஜதந்திர கட்டமைப்பில் இலங்கைத்தீவின் சிங்கள ராஜதந்திர வட்டாரங்களை விஞ்சக்கூடிய அளவு ராஜதந்திர சாணக்கியம் மிக்க இராஜதந்திரிகள் இன்னும் இந்தப் பிராந்தியத்தில் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கையின் அரசியலில் அதன் வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திர கட்டமைப்பு என்பன கடந்த 2300 ஆண்டுகால வரலாற்றில் அவை பௌத்த மகாசங்கத்தின் வழிநடத்தலில் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது.

அது அதன் தொடர் வளர்ச்சியிலும், அனுபவத்திலும், வரலாற்றுப்படிப்பினைகளிலிருந்தும், நடைமுறைகளில் இருந்தும் தோன்றி இன்று சிங்கள பௌத்த தேசியவாதத்தை எந்த சந்தர்ப்பத்திலும் காக்க வல்ல கவசமாகப் பரிணமித்துள்ளது.

ராஜதந்திர ரீதியில் வெற்றி
இத்தகைய ராஜேந்திர கட்டமைப்பைக் கொண்டுள்ள சிங்கள இனம் இலங்கைத்தீவின் வரலாற்றில் காலனித்துவ காலத்தில் சிங்கள அரசு தனது முடியை மட்டுமே இழந்ததே தவிர அது தனது இறுக்கமான ராஜதந்திர கட்டமைப்பையும், அதன் தொடர்ச்சியையும், தனித்துவத்தையும், பௌத்த மாசங்கத்தின் ஊடாக பாதுகாத்ததோடு சிங்கள பௌத்த அரச பாரம்பரியத்தைத் தொடர்ந்து பேணிவந்துள்ளது.

அத்தகைய தொடர் ராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சிங்கள தேசத்தின் தலைவர்களை இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்வது என்பது இலகுவான காரியம் அல்ல.

அவர்கள் முன்னே பார்ப்பதுபோல பாசாங்கு செய்துகொண்டு பின்னாலுள்ளவர்களை வீழ்த்தும் தந்திரசாலிகள். எவ்வாறு எதிரிகளை வீழ்த்தினார்கள், வீழ்த்துகிறார்கள் என்று எதிரி அனுமானிக்க முன்பே அடுத்தோல்விக்கான பொறியையும் ஏற்பாடு செய்துவிடுவர்.

இது ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் மேற்குலக ராஜதந்திர வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

இவர்கள் அனைவரும் சிங்கள இராஜதந்திரிகளிடம் தொடர்ந்து தோற்றுப்போன வரலாற்றையே பெரிதும் கொண்டுள்ளனர். பூமிப்பந்தின் ஒரு சிறு புள்ளியான இலங்கைத் தீவின் அரசியலைப் பெரு வல்லரசுகளாலும் கூட இலகுவில் தாம் விரும்பிய வடிவத்திற்கு மாற்றியமைக்க முடியவில்லை. பல தடவை முயன்றும் தோல்வியே அடைந்திருக்கின்றனர்.

பிரித்தானிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்
“யானைக்குப் புயம் பலம் எலிக்கு வளைபலம்” சர்வதேச அரசியல் என்ற யானையையும், பிராந்தி அரசியல் என்று இந்திய யானையையும் எலி அளவான சிங்கள ராஜதந்திரம் தனக்கு நெருக்கடி வருகின்றபோது பௌத்த மகாசங்கம் என்கின்ற வளைக்குள் புகுந்து ஒளித்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.

இதனை இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களான டி. எஸ் .சேனநாயக்க, டட்டிலி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, ஜே ஆர் ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் இன்றைய ரணில் வரை அனைவரும் தமக்கு நெருக்கடி வருகின்ற போது பௌத்த மகாசங்கம் என்கின்ற வளைக்குள் புகுந்து ஒளித்துக்கொண்டு தங்களையும் பாதுகாத்து, சிங்கள அரசையும் பாதுகாத்துக் கொள்வர்.

பௌத்த மகா சங்கமே சிங்கள அரசைப் பாதுகாக்கின்ற பாதுகாப்புக் கவசமாகும். இந்த அடிப்படையில் இலங்கை சுதந்திரம் அடைகின்ற, அடைந்த காலத்தில் சிங்கள அரசுக்கு தலைமை தாங்கிய டி.எஸ். சேனநாயக பிரித்தானியா, இந்தியா, என்ற வெளியுலக எதிரிகளையும், உள்ளகத்துக்குள் கம்யூனிஸ்ட்டுகள், ஈழத் தமிழர், மலையகத்தமிழர், முஸ்லிம்கள் என பலதரப்பட்ட எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.

அப்போது அவர் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதாக நாடகம் ஆடினார். இந்தியக் காங்கிரசுடன் இணைந்து இந்தியக் கூட்டாட்சிக்குள் தாம் இணைந்து வரப்போவதாக ஒரு பாசாங்கு செய்தார்.

வாக்குறுதிகளை நேருவுக்கு வழங்கினார், சுதந்திரம் கிடைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னே 1947ஆம் ஆண்டு இறுதியில் பிரித்தானிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்து திருகோணமலை துறைமுகத்தையும், கட்டுநாயக்க விமான நிலையத்தையும் பிரித்தானியாவுக்கு கையளித்தார்.

தமிழுக்குச் சம அந்தஸ்து
அதன்மூலம் இந்திய மேலாண்மையைத் தடுத்து நிறுத்தியதோடு மாத்திரமல்ல இந்தியா காங்கிரசுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு நேருவுக்கு முதுகில் குத்தினர். அடுத்து உள்ளகத்திலிருந்த மிகப் பிரதான எதிரி மலையகத் தமிழர்களும் அதன் தொழிற்சங்கங்களும். அதனால் பலம் பெற்று இருந்த கம்யூனிஸ்ட்டுகளும்தான்.

இந்த கம்யூனிஸ்டுகளை வெற்றிகொள்ள இரண்டாம் எதிரியான ஈழத்தமிழர் தரப்பின் தலைமைத்துவமாக அன்றிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஜி.ஜி.பொன்னம்பலத்தை அரவணைத்து கடற்தொழில் விவசாய கைத்தொழில் அமைச்சுப் பதவியும் கொடுத்து அரசாங்கத்தில் இணைத்ததன் மூலம் தன்னை பலப்படுத்தி கம்யூனிஸ்டுகளை தோற்கடிப்பதற்கான வியூகத்தை வகுத்தார்.

அதன் அடிப்படையில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்ததன் மூலம் அவர்கள் வாக்குரிமையையும் பறித்து தொழிற்சங்கங்களை முடமாக்கி கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி விட்டார். தமிழுக்குச் சம அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும், தமிழர்களுக்குப் பிராந்திய சுயாட்சி அலகு பொருத்தமானது எனச் சொல்லி வந்த கம்யூனிஸ்ட்டுகளை ஈழத் தமிழர்களிடமிருந்து பிரித்தது மாத்திரமல்ல மலையகத் தமிழர்களையும் வீழ்த்தி கம்யூனிஸ்ட்களையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தி விட்டார்.

18 ஏப்ரல் 1955ஆம் ஆண்டு பாண்டுங்கில் நடந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளின் மகாநாட்டில் கலந்துகொள்ள வந்த சீனத் தலைவர் சூஎன்லாய் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவுக்கு கைலாக கொடுக்க வந்தபோது கை கொடுக்காமல் விலகிச் சென்றதன் மூலம் தாம் மேற்குலகின் விசுவாசிகள் என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

ஆனால் இந்த மேற்குலக விசுவாசம் 1970களில் குழிதோண்டி புதைக்கப்பட்டது மாத்திரமல்ல இலங்கை பிரித்தானிய முடியிலிருந்து முற்றாக விடுபட்டு இலங்கையை ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாற்றியும் அமைத்தனர்.

இந்தியத் தலைவர்கள்
உலக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமது தேவைகளை வடிவமைத்து உலக அரசியலையும், பிராந்திய அரசியலையும் கையாளுவதில் சிங்கள ராஜதந்திரிகள் எத்தகைய வித்துவத்தை காட்டினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள மேற்குறிப்பிட்ட சம்பவங்களே போதுமானவை.

இவ்வாறுதான் இந்தியாவுடன் காலத்துக்குக் காலம் தமது தேவைகளுக்கு ஏற்றது போலச் சிங்களத் தலைவர்கள் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி. பி. சிங் என இந்தியத் தலைவர்கள் அனைவரையும் பௌவியமாக அணுகி, இனிப்பாகப் பேசி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி ஒப்பந்தங்களை சாதுரியமாகச் செய்து தங்கள் நலன்களை அடைவதில் முழுநீள வெற்றியைச் சம்பாதித்துள்ளனர். இத்தகைய இந்தியத் தலைவர்களுடனான ஒப்பந்தங்களினால் இந்திய அரசு எதனையும் பெற்றுக் கொண்டதா? என்றால் ஒரு குண்டுமணியைத்தானும் கொள்ளவில்லை என்பதே பதிலாகும்.

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக 4.5 இலட்சத்திற்கு மேலான மலையக தமிழர்களைப் பொறுப்பேற்று அந்தப் பெருஞ்சுமையை இந்தியாவைச் சுமக்க வைத்துவிட்டார்கள்.

இந்திரா-ஸ்ரீமா ஒப்பந்தத்தின் ஊடாக இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்தியா இழந்தது. அல்லது விட்டுக் கொடுத்தது. கச்சத்தீவில் சில வருடங்களில் சீனத்தின் செங்கொடி பறப்பது தவிர்க்க முடியாது.

ரஜீவ்காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் ஊடாக தனது இரண்டு எதிரிகளையும் மேசைக்கு அழைத்து வந்து இருத்தி இந்தியாவையும் ஈழத் தமிழரையும் மோதவிட்டு இரண்டு எதிரிகளையும் பகைவர்களாக்கி இந்திய இராணுவத்தின் சர்வதேச மதிப்பையும் இந்தியாவின் ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கி சர்வதேச அரங்கிலே கறைபடிய வைத்தனர் சிங்களத் தலைவர்கள்.

இந்தியாவுடன் நட்புறவு
அதன் மூலம் இந்தியாவை இலங்கையின் பிரச்சினை மற்றும் இந்து சமுத்திர பிராந்திய அரசியலில் இந்தியாவை ஒரு சக்கர வியூகத்திற்குள் சிக்க வைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முடக்கி புலிகளைக் களத்தில் இருந்து அகற்றிவிட்டது.

அதனைத் தொடர்ந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாவுக்கு வழங்கி இந்து சமுத்திரத்தில் சீனாவைக் கால்பதிக்க வைத்தது மாத்திரமல்ல இந்தியாவைச் சீனாவினதும் சக்கர வியூகத்திற்குள்ளும் சிக்கவைத்துவிட்டது. இப்போது இந்து-பசிபிக் பிராந்திய அரசியலில் எழுந்த நெருக்கடிகளைத் தணிப்பதற்கு இந்தியாவுடன் நட்புறவு பூணுவதாகவும், பௌத்த மதத்தை இந்தியா தமக்கு தானமாகத் தந்தது என்று பாசாங்கும் செய்கிறது.

இலங்கை அரசியல் இராஜதந்திர வட்டத்தில் டி.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்போரின் அரசியல் மரபில் இறுதியாக இருப்பவர்தான் ரணில் விக்ரமசிங்க. ரணிலை அந்தச் சேனநாயக்க குடும்ப அரசியல் பாரம்பரியத்தின் இறுதி வாரிசு என்றும் சொல்லலாம்.

அத்தகைய ரணில் விக்ரமசிங்க இப்போது இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார். அவர் இந்தியாவுக்குக் காவிச் செல்வது என்ன? இந்தியாவுக்குக் கொடுக்கப் போவது என்ன? என்று பலரும் பரவலாகப் பேசக்கூடும்.

உண்மையில் ரணில் விக்ரமசிங்க இறந்துபோன, படுகொலை செய்யப்பட்ட, சிங்கள தேசத்தில் புதைக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தூசி தட்டி அதனால் உருவாக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு தங்கமூலாம் பூசி இந்திய அரசுக்கு காட்டப்போகிறார். அதனைத்தான் நடைமுறைப்படுத்தப் போவதாகப் பலமுறை இலங்கையில் இருந்து சொல்லிவிட்டார். அதில் ஒரு அணுவளவும் மாற்றம் இன்றுவரை ஏற்படவில்லை.

இந்திய அரசிடம் பெரும் உதவித் தொகை
இருப்பினும் மீண்டும் அதே பாணியில் இந்தியாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வாரான ஒரு திட்ட வரைவை 13ஆம் திருத்தச் சட்டத்திற்குச் சற்று மேலானது எனக் காட்டி ஒரு வாக்குறுதியை மட்டுமே இந்தியாவுக்கு அவரால் வழங்க முடியும்.

அதைத்தான் அவர் செய்வார் அதனை இந்திய ராஜதந்திரிகளும் அரசியல்வாதிகளும் நம்பக்கூடிய வகையில் மிகக் கச்சிதமாகவும் செய்து முடிப்பார்.

இந்தியக் கூட்டாட்சியில் இலங்கையையும் இணைக்கப் போவதாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் வாயிலாக அன்று ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியத் தேசியத்தலைவர்களுக்கு 1944 ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்து இந்தியத் தேசிய காங்கிரசின் மாநாட்டில் கலந்துகொண்டு நாடகமாடிவிட்டுப் பின் இந்தியாவுக்கு எதிராகப் பிரித்தானியாவுடன் இராணுவக் கூட்டுச் சேர்ந்த வரலாற்றை ரணிலின் இன்றைய நாடகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆகவே ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குக் கொடுக்கக் கூடியது என்னவெனில் வெற்று பத்திரங்களும் வாக்குறுதிகளும் மட்டுமே. ஆனால் அவர் இந்தியாவிடம் இருந்து பெறப்போவது என்னவெனில் இந்திய பல்தேசிய நிறுவனங்களின் பெரும் முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டு வருவதும் (மூலதன உட்பாச்சலை) ஏற்படுத்துவதுமாக இருக்கும்.

அது மட்டுமல்ல இந்திய அரசிடம் பெரும் உதவித் தொகையையும், கடனையும் பெற்று இலங்கை திறைசேரியின் கஜானாவை நிரப்பிக் கொண்டுதான் திரும்புவார்.

இந்த விடயத்தில் மீண்டும் மீண்டும் இந்திய அரசும், இராஜதந்திரிகளும் ஏமாற்றப்படுவார்கள். அவ்வாறே ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களும் இலகு காத்த கிளியாக ஏமாற்றம் அடைவார்கள். இந்தியாவையும், ஈழத் தமிழர்களையும் தொடர்ந்து இலங்கை இராஜதந்திரம் அவமானகரமாக ஏமாற்றியதுதான் கடந்த 75 ஆண்டுகால வரலாறு பதிவுசெய்துள்ள