இதனை அன்றே சொன்னான் “குட்டிமணி “–கேட்டீர்களா

கார்த்திகை தீபமேற்ற, வடக்கு, கிழக்கில் பல்வேறான இடையூறுகள் விளைவிக்கப்பட்ட நிலையில், மஹர வானத்தை முட்டுமளவுக்கு மேலெழுந்த ஒளிப்பிளம்புக்குப் பின்னால், கைதிகள் எட்டுப் பேர் மரணமடைந்தும், 999 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என்பது, பொழுது புலர்கையில் புரிந்துகொள்ள முடிந்தது.

உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க, சகலருக்கும் உரிமையுண்டு. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, கைதிகள், விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பாளி. சிறைக்குச் சென்றோர் எல்லோரும் குற்றவாளிகள் அல்லர் என்பதே உண்மை.

“தங்களுடைய பிள்ளைகளுக்குப் பிணைகிடைத்தும், உயிருடன் இருக்கின்றனரா என, சிறைச்சாலை பஸ்களைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்கும், கைதிகளின் உறவினர்களின் கண்ணீருக்கும் கேள்விகளுக்கும், பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கொழும்பில், வெலிக்கடை சிறைச்சாலையை கடந்து செல்கையில், ‘சிறைக் கைதிகளும் மனிதர்கள்’ என்ற வாசகத்தை வாசிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். சிறைக்குள்ளும் மனிதர்கள்தான் இருக்கின்றனர். கொவிட்-19 கொத்தணி சிறைச்சாலைக்குள் சென்றுவிட்டமையால், கைதிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆகையால், தங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சிறைக் கைதிகள் ​கோரிக்கை விடுத்திருந்தனர். அது அவர்களின் உரிமையாகும். அவ்வாறான கோரிக்கை, பூஸாவில் ஆரம்பித்து, மஹர சிறை வரையிலும் வியாபித்திருந்தது. இறுதியில் துப்பாக்கிகளில் இருந்து ரவைகள் பாய்ந்துவிட்டன.

சடலங்களிலும் துப்பாக்கிச் துளைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படாலும், மரண பரிசோதனைகள் இன்றி, கைதிகளின் சடலங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதில், ஏ​தோவொன்று மறைக்கப்படுகின்றது என்பது மட்டுமே உண்மையாகும்.

மஹர சிறைச்சாலைப் படுகொலை முதலாவது சம்பவமல்ல; இறுதியானதாகவும் இருக்காது. 2012 ஆம் ஆண்டு, இதேபோன்ற நவம்பரில் வெலிக்கடை சம்பவம் இடம்பெற்றது என்பதை, யாரும் மறந்துவிட மாட்டார்கள். ஜனநாயகம், மனித உரிமைகளை மதிக்கும் நாடொன்றில், இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் ‘கரும்புள்ளி’யைக் குத்திவிடும்.

“நாங்கள், சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்க வந்தவர்கள் அல்லர். எங்களுடைய போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நாடிநிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி, நாளை உங்களுக்கு ஏற்படக்கூடும்” என குட்டிமணி கூறியிருந்தார்.

1983 ஜூலைக் கலவரத்தின் ​போது, குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே, அவருடைய கண்கள் இரண்டும் பிடுங்கியெடுக்கப்பட்டு புத்தனின் காலடியில் போடப்பட்டன என்பது வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இது வெலிக்கடை சிறையிலேயே இடம்பெற்றுள்ளது.
குட்டிமணியின் இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் அனுபவித்துவிட்டனர்.

இன்னும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பது நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது புரிந்துகொள்ளமுடிகிறது. “துப்பாக்கிகள் தானாக பற்றவைக்காது” என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்குத் ‘தீர்க்கதரிசனம்’ முக்கியமாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.