போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய செயற்பாடு குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் வகையில், அந்த தேசிய செயல்பாட்டு சபையுடனான கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது .
போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கே ஆராயப்பட்டதுடன், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்தச்) சட்டமூலத்தை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்ததுடன், சிறைச்சாலையிலுள்ளவர்களின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான முறையான மூலோபாயமொன்றின் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றமொன்றை நிறுவுதல், அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் மற்றும் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பதற்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி குறிப்பிடப்பட்டது.




