தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: மழையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




